Published : 29 Mar 2023 03:49 PM
Last Updated : 29 Mar 2023 03:49 PM
சென்னை: "எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறை சார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைது செய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப் பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடுஞ்சித்திரவதையில் ஈடுபடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை எனும் பெயரில் வரம்பு மீறி, கொடூரமான மனிதவதையை அரங்கேற்றியுள்ள பல்வீர் சிங்கின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
மனிதநேயம் துளியுமில்லாத பல்வீர் சிங் போன்றவர்கள் மக்கள் சேவைப்பணிகளில் இருக்கவே தகுதியற்றவர்கள். ஏற்கெனவே, காவல்துறைக்கும், பொது மக்களுக்குமிடையே பிணைப்பில்லாத தற்காலச்சூழலில், இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் காவல்துறை மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை உருவாக்கிவிடும். பல்வீர் சிங்கை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றியிருப்பது போதுமான நடவடிக்கை இல்லை.
எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறைசார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது.
ஆகவே, காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டுமெனவும், அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கு தகுந்த மருத்துவச்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 29) தெரிவித்தார். அதன் விவரம்: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் | அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி சஸ்பெண்ட்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT