Published : 29 Mar 2023 01:00 PM
Last Updated : 29 Mar 2023 01:00 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சட்டம், ஒழுங்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அந்தப் பதிலில், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ல், கடந்த அதிமுக ஆட்சியில், 1,670 கொலை சம்பவங்கள் நடைபெற்றன. திமுக ஆட்சியில், அதாவது, 2022-ல் அது 1,596 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் இந்த ஆட்சியில்தான் குறைக்கப்பட்டுள்ளன, அப்படிச் சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது.
நமது ஆட்சியைப் பொறுத்தவரை, காவல் துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில் எந்தவிதமான பாரபட்சமோ, அரசியலோ எதுவும் பார்க்காமல், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT