Published : 29 Mar 2023 06:12 AM
Last Updated : 29 Mar 2023 06:12 AM
சென்னை: வருமானத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சமாக கடன் பெற்று நல்லதிட்டங்களை, தேவையானவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என்று சட்டப்பேரவையில் அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 23-ம்தேதி தொடங்கி 27-ம் தேதிவரை நடந்தது. அதற்கு பதில் அளித்துநிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பேசியதாவது: கடன் வாங்குவது மற்றும் விற்பனையை வங்கிக் கணக்கில் காட்டுவதற்கு ஏதுவாகவும், பணவீக்கத்துக்கு ஏற்பவும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளோம். தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 ஆண்டுகள் நிலுவை தொடரக் கூடாது என்பதால் ‘புதுமைப்பெண்’ திட்டமாக மாற்றினோம்.
கோவை விமான நிலையத்துக்கு 80 சதவீத நிலம் எடுக்கப்பட்டு ரூ.1,728 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிலத்தை இலவசமாக கொடுத்தால், இந்தியவிமான நிலையங்கள் ஆணையம்,அதை தனியாருக்கு வழங்கிவிடுகிறது. இதை தடுக்க, வெளிப்படையாக நில உரிமையை கொடுக்காமல், அரசு நடத்தினால் குறைந்த குத்தகையில் வழங்குமாறும், தனியாருக்கு கொடுப்பதால் நிலத்தின் முழுமதிப்பு, அல்லதுவாடகை, அல்லது பங்குதரவேண்டும் என்றும் ஒப்பந்தம் உருவாக்கினோம். அது நிலுவையில் உள்ளது.
அதிமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாகவும், திமுகதான் நிறைவேற்றவில்லை என்றும் அக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். 2011 தேர்தலில் 186வாக்குறுதிகள், 2016 தேர்தலில் 321 வாக்குறுதிகள் என அதிமுகமொத்தம் 507 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 269-க்குதான்அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 110 விதியின்கீழ், ரூ.3.27 லட்சம் கோடியில் 1,704 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில், ரூ.87,405 கோடியில் 27 சதவீத திட்டங்கள்தான் செயல்படுத் தப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சியில் இதுவரை, ஆளுநர் உரை, முதல்வர் செய்தி வெளியீடு, இதர அறிவிப்புகள், 110 விதியின்கீழ் அறிவிப்புகள், பட்ஜெட் அறிவிப்பு என மொத்தம் 3,537 அறிவிப்புகளில் 3,038, அதாவது 88 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
வரும் தலைமுறை மீது கடன்சுமத்தாமல், வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அதன் முதல் படியாக, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டது. தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலமும் குறைக்கவில்லை.
யார் பணக்காரர், யார் ஏழைஎன்று பார்க்க தரவு அடிப்படையிலான நிர்வாகம் குறித்து தெரிவித்தோம். தற்போது வருமான வரி தகவலை பரிமாற வருமான வரி துறையும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் ஒப்பந்தம் அமைத்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதமாற்றத்தை நிர்வாகத்தில் கொண்டுவந்துள்ளோம். ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’ என்ற திருக்குறளை கடந்த 2021-22 திருத்தப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிட்டேன். இதில் ‘காத்தலும், காத்த வகுத்தலும்’ (திரட்டிய வருவாயை பாதுகாப்பது மற்றும் திட்டங்களுக்காக செலவிடுவது) என்பதை சிறப்பாக செய்துள்ளோம்.
ஆனால், ‘இயற்றலும், ஈட்டலும்’ (வருமானத்துக்கான வழிகளை உருவாக்குவது மற்றும் அதை தொகுப்பது) என்பதை தொட்டாலே அரசியல் ரீதியாக எதிர்ப்பு வருகிறது. இது செயல்திறனை பாதிக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்ட மின்கட்டணமே இதற்கு உதாரணம்.
தேவைப்படுவோருக்கு தேவையானதை கொடுப்பதுதான் முக்கியம். நாம் கடனில் இருக்கிற, வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலம். திடீரென ஒரு திட்டத்துக்கு கடன் வாங்கும்பட்சத்தில், எதிர்கால தலைமுறையின் தலையில் சமமாக அந்த கடனை வாங்குகிறோம்.
ஆனால், அதை பணக்காரருக்கும், ஏழைக்கும் பிரித்துக் கொடுப்பது சரியா? இது சமூக நீதிக்கு செய்யும் துரோகம். அதேநேரம், அரசுக்கு வட்டி அதிகமானால், உதவித் தொகைகளுக்கு பாதிப்பு வரும்.எனவே, சமூக நீதிக்கு ஏற்ப, குறைந்தபட்சம் கடன் பெற்று நல்ல திட்டங்களை, தேவையானவர்க ளுக்கு அளிக்க வேண்டும்.
2 ஆண்டுகளில் நிதி சீர்திருத்தம் செய்துவிட்டோம் என்றாலும், மீண்டும் இயற்றலும் ஈட்டலும்தான் அடுத்த ஆண்டுகளில் முக்கியமான பணியாக உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பது, புதிய நிறுவனங்களை கொண்டுவருவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சரிந்து கொண்டிருக்கிற, ஒளிந்து கொண்டிருக்கிற வருவாயை மீட்டு மக்களுக்கு கூடுதல் திட்டங்கள் அளிப்பதுதான் நமது திட்டம்.
முதல்வர் தெரிவித்த இலக்கான 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய, இயற்றலுக்கும், ஈட்டலுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT