Published : 07 Sep 2017 01:32 PM
Last Updated : 07 Sep 2017 01:32 PM
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தனக்கு அனுமதி அளிக்கப்படாததால், ஆசிரியப் பணியை ராஜினாமா செய்வதாக விழுப்புரம், வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 'தி இந்து' (தமிழ்) இணையதளத்துக்கு சபரிமாலா அளித்த பிரத்யேகப் பேட்டியில், ''நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அரசுப்பணியில் இருப்பவர்கள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றார்கள். ஒரே கல்வி இல்லாத நாட்டில் ஒரே தேர்வு மட்டும் எப்படி இருக்க முடியும்? அதைக் கேட்க கற்பிக்கும் ஆசிரியருக்கு உரிமை இல்லை. அதனால் பணியைத் துறக்க முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறேன்.
வகுப்பறைகளில் ஆண்டுக்கு 30 மாணவர்களை உருவாக்கதான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இனி கிராமங்கள்தோறும் சென்று லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்குவேன்'' என்றார்.
உங்களின் ராஜினாமா முடிவை குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டனர் என்று கேட்டதற்கு, ''உன்னுடைய எண்ணங்களை முழு சுதந்திர உணர்வோடு வெளிப்படுத்தும் உரிமை உண்டு. வெற்றி பெறும் அனிதாக்களை வருங்காலத்தில் உருவாக்க வாழ்த்துகள் என்று என் கணவர் கூறினார்'' என்றார் சபரிமாலா.
விழுப்புரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு அவர் அளித்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், ''சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட தேசம் முக்கியம் என்பதால் ஆசிரியப் பணியினை ராஜினாமா செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தன் 7 வயது மகனுடன் பள்ளியில் போராட்டம் நடத்தியவர் சபரிமாலா என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் ராஜினாமாக் கடிதம்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT