Published : 28 Mar 2023 02:55 PM
Last Updated : 28 Mar 2023 02:55 PM
சென்னை: ‘பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், தடை எதுவும் விதிக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) தீர்ப்பளித்தார். 85 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் > கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றபோதும்கூட, கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எனவே, அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க முடியாது.
> காரணம், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. 2460 கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுபடியாகக்கூடியவை.
> பொதுச் செயலாலர் பதவியை மீண்டும் கொண்டுவந்த தீர்மானமும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்த தீர்மானங்களும் செல்லும்.
> ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானங்களுக்கு தடை விதித்தால், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியை நிர்வகிக்க வேண்டிவரும். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கக் கூடிய அபாயம் ஏற்படும்.
> ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்டுள்ள சிறப்பு தீர்மானத்தைப் பொறுத்தவரை, அதுகுறித்து முதன்மை வழக்கில்தான் தீர்மானிக்க முடியும். 7 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய விதி மீறப்பட்டுள்ளது என்றாலும்கூட, அந்தச் சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதித்தால், அது அக்கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது.
> பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தாலும், கட்சியை வழிநடத்துவதற்கு தலைவர் இல்லாமல், கட்சி பாதிக்கப்படும்.
> பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், இதில் தடை எதுவும் விதிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தடை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT