Published : 28 Mar 2023 01:03 PM
Last Updated : 28 Mar 2023 01:03 PM

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழகத்தில் 29.11.2022-ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x