Published : 02 Sep 2017 12:11 PM
Last Updated : 02 Sep 2017 12:11 PM
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக 3 முக்கிய அணைகள் மற்றும் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ராஜாதோப்பு அணைப் பகுதியில் 55.8 மி.மீ மழை பதிவானது.
தமிழக கடலோரப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தம் மற்றும் வெப்பச் சலனம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. தற்போது, இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக வறட்சியை சந்தித்த விவசாயிகளுக்கு, இந்த ஆண்டில் பெய்துள்ள மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழையும் குறித்த நேரத்தில் தொடங்கி பெய்தால் நீர்நிலைகள் நிரம்புவதுடன் விவசாயப் பணி செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.
இந்த ஆண்டு வறட்சியை சமாளிக்க நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் அரசு சார்பில், குடிமராமத்து பணிகளை தொடங்கினர். முக்கிய நீர்நிலைகளிள் கால்வாய்களை தூர்வாரியதால் தற்போது பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி, மழை நேற்று வரை விடிய விடிய பெய்தது. பெரும்பாலான இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பதிவானது. நேற்று காலை 10 மணி வரை பல இடங்களில் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ராஜாதோப்பு அணைப் பகுதியில் 55.8 மி.மீ மழை பதிவானது. வேலூரில் 50.6 மி.மீ, ஆம்பூரில் 12.2, ஆலங்காயம் 7.8, அரக்கோணம் 20, காவேரிப்பாக்கம் 39, வாலாஜா 28, சோளிங்கர் 9, ஆற்காடு 24, குடியாத்தம் 7.3 மற்றும் மேல் ஆலத்தூரில் 14.4 மி.மீ மழை பதிவானது.
அணைகளின் நிலவரம்
மோர்தானா அணையின் முழு கொள்ளளவு 261.36 மில்லியன் கன அடி. நேற்றைய கணக்கீட்டின்படி, நீர் இருப்பு 60.48 மில்லியன் கனஅடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து 30.42 கனஅடியாகவும் அணைப் பகுதியில் பதிவான மழையளவு 3 மி.மீ என்றளவில் இருந்தது.
ராஜாதோப்பு அணையின் முழு கொள்ளளவு 20.52 கனஅடியாகும். தற்போதைய நீர் இருப்பு 2.28 மில்லியன் கனஅடி. அணைக்கான நீர்வரத்து 9.26 கனஅடியாகவும் அணைப் பகுதியில் நேற்றைய மழையளவு 55.8 மில்லி மீட்டராகவும் பதிவாகியிருந்தது.
ஆண்டியப்பனூர் அணையின் முழு கொள்ளளவு 112.20 மில்லியன் கனஅடியாகும். தற்போதைய நீர் இருப்பு 55.88 மில்லியன் கனஅடி. அணைக்கான நீர்வரத்து 17.22 கனஅடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் நேற்று மழை பதிவாகவில்லை.
ஏரிகள் நிலவரம்
பொதுப் பணித்துறைக் கட்டுப்பாட்டில் மொத்தம் 519 ஏரிகள் உள்ளன. தொடர் மழையின் காரணமாக ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கத்தாழம்பட்டு, நெமிலி தாலுகா பெருவளையம் மற்றும் ஈராளச்சேரி ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அரக்கோணம் பெரிய ஏரியில் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. வாலாஜா தாலுகா அருங்குன்றம் பெரிய ஏரியில் 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. மற்ற ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான நீர் இருப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT