Published : 28 Mar 2023 06:03 AM
Last Updated : 28 Mar 2023 06:03 AM
சென்னை: குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுமுடிவுகள் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சியிடம் முந்தைய தேர்வுகள் தொடர்பாக ஒப்பீட்டு அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் விளக் கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்றைய நேரமில்லா நேரத்தில், டிஎன்பிஎஸ்சி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: டிஎன்பிஎஸ்சி சார்பில் நில அளவையர், வரைவாளர் தேர்வு முடிவுகள் வெளியானது. 29 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 1,089 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில், காரைக்குடியில் தனியார் மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், குரூப்-4 தேர்வில்தென்காசியைச் சேர்ந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முறைகேடு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
த.வா.க தலைவர் தி.வேல்முருகன்: கடந்த அதிமுக ஆட்சியில் வெளிமாநிலத்தவர்கள், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதலாம் என்று விதிகள் மாற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
(அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.)
பழனிசாமி: நான் பேசும்போது யாரையும் குற்றம்சாட்டவில்லை. தேர்வில் தவறு நடைபெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டினேன். ஆனால், வேறு ஒருவரை வைத்து எங்கள் ஆட்சியில் நடைபெற்றதை பற்றி பேச வைத்துள்ளீர்கள்.
தி.வேல்முருகன்: கடந்த 2016-ம்ஆண்டு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, இந்த விதிகள்டிஎன்பிஎஸ்சியில் கொண்டுவரப்பட்டது. அதன்பின் 2019-ம் ஆண்டு ஒரே மையத்தில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
(உடனே அதிமுகவினர் மீண்டும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வேல்முருகன் தொடர்ந்து பேச பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.)
அதன்பின் நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), அருள் (பாமக)டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய கோரிக்கைவிடுத்தனர். இவற்றுக்குப் பதில் அளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
தேர்வு தொடர்பான தகவல் எனக்கு வந்ததும், டிஎன்பிஎஸ்சி தரப்பிடம் இருந்து தகவல் கோரப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தன்னாட்சிநிறுவனம். இதுவரை வந்த தகவல் அடிப்படையில், குரூப்-4 தேர்வு தொடர்பாக பொது வெளியில் வந்த தகவலுக்கும் டிஎன்பிஎஸ்சி அளித்த தகவலுக்கும் தொடர்பில்லாமல் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் தேர்வெழுதியவர்களில் முதல் 500 பேரில் 27 பேர், ஆயிரம் பேரில் 45 பேர், 10 ஆயிரம்பேரில் 397 பேர் தேர்வு பெற்றுள்ளனர். பயிற்சி மைய நிர்வாகி அளித்தவிளம்பரத்தில் பல மாவட்டங்களில் பல பெயர்களில் பல நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதில் 2 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
குரூப் 4-ல் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் தேர்வு நடைபெற்றது. இரண்டிலும் வெவ்வேறுமுன்னுரிமை பட்டியல் வெளியானது. இளநிலை உதவியாளர் தேர்வுக்கு தொழில்நுட்ப தகுதி தேவையில்லை. தட்டச்சர் தேர்வுக்கு சிறப்புதகுதி உள்ளது. அதனால் பட்டியலில் ஏற்ற இறக்கம் இருந்தது இயல்புதான்.
சர்வேயர் தேர்வில் காரைக்குடியில் ஒரு மையத்தில் முதல் 500 ரேங்க்கில் 200, முதல் ஆயிரம் ரேங்க்கில் 377 பேர், முதல் 2 ஆயிரம் ரேங்க்கில் 615 பேரும் ஒரே இடத்தில் எழுதியவர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும், கடந்த 7 ஆண்டுகளில் இதுபோன்று ஒரு மையத்தில் கூடுதலாக நடைபெற்ற வரலாறு உள்ளதா? குரூப் 2, குரூப் 4-ல் மையம், மாவட்டம் அளவில் எண்ணிக்கை ஒற்றுமை, வேறுபாடு உள்ளதா? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியை சீர்திருத்தம்செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம், பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT