Published : 28 Mar 2023 06:45 AM
Last Updated : 28 Mar 2023 06:45 AM
செங்கல்பட்டு: மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிக ளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. வரும், 30-ம் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்து அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாயுடைய பகுதிகளை நகராட்சிகளாக அறிவிப்பது வழக்கம். மேலும், நகரமயமாக்கலில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாகும். நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் உள்ளாட்சிகளை, குறிப்பிட்ட காலத்துக்கு பின் தரம் உயர்த்தி, அடுத்த நிலைக்கு மாநில அரசு கொண்டு செல்கிறது.
இதன்படி ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் நிலை உயர்த்தப்படுகின்றன. அவ்வாறு அமையும் புதிய உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள்தொகை, நகர வளர்ச்சி, அதன் உட்கட்டமைப்பு வசதி களுக்கேற்ப, மாநிலங் களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு பல நகராட்சிகள், மாநகராட்சிகளாகவும், 29 பேரூராட்சிகள், நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப் பட்டன.
இதேபோல் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. அதன் விவரம் வருமாறு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஈரோடு - பெருந்துறை, திருப்பூர் - அவிநாசி, உதகை- கோத்தகிரி, நெல்லை மாவட்டத்தில் வடக்கு வள்ளியூர், சங்கர் நகர், நாராணம்மாள்புரம், தென்காசி - ஆலங்குளம் என 10 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன.
மேலும், நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறு விவரங்களை நகராட்சி நிர்வாக ஆணையரகம், பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்றுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 30-ம் தேதி மானிய கோரிக்கையின்போது இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தினர் தரம் உயர்த்தப்படுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதால் பேரூராட்சி நிர்வாக துறை பாதிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய வளர்ந்த ஊராட்சிகளை, பேரூராட்சியாக மாற்றி அமைக்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது, புதிதாக அறிவிக்கப்பட உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதனால், செயல் அலுவலர்கள் பதவிகள் இல்லாமல் ஆணையர் பதவி உருவாக்கப்படும். பேரூராட்சிகளில் பல பணியிடங்கள் குறைந்து வருகிறது. இவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT