Published : 28 Mar 2023 05:50 AM
Last Updated : 28 Mar 2023 05:50 AM

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் அறிமுகம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வரும் மாநகராட்சி நிலைக்குழு தலைவர்(வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ். உடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி. படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.4 ஆயிரத்து 466 கோடி மதிப்புக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பொதுமக்களின் புகார்கள் மீது தீர்வுகாண `மக்களைத் தேடி மேயர்' என்ற திட்டத்தை மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் பங்கேற்று மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றியதாவது:

மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டில் வருவாய் செலவினம் ரூ.4,466 கோடியே 29 லட்சமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.334 கோடியாக இருக்கும். சொத்து வரி வருவாய் ரூ.1,680 கோடி, தொழில் வரி வருவாய் ரூ.500 கோடியாக இருக்கும். பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ரூ.1,939 கோடி, நிர்வாக செலவு ரூ.231 கோடி, பராமரிப்பு செலவினங்கள்ரூ.1,079 கோடி, கடனுக்கான வட்டி செலுத்துதல் ரூ.148 கோடியாக இருக்கும்.

மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1,482கோடி, பேருந்து சாலை மேம்பாட்டுக்கு ரூ.881 கோடி, திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.260 கோடி, சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாமன்றத்தில் மேயர்ஆர்.பிரியா அறிவித்ததாவது: பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளைக் களைய, மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை மேயர் நேரடியாக பெறும்வகையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம்செயல்படுத்தப்படும். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 139 பள்ளிக் கட்டிடங்கள் உட்படமாநகராட்சி கட்டிடங்கள் ரூ.45 கோடியில்சீரமைக்கப்படும். இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ரூ.5 லட்சத்தில்ஆர்மோனியம், தாளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாங்கப்படும்.

2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். மாநகராட்சிபூங்காக்கள் அனைத்தும் ரூ.48 கோடியில் பராமரிக்கப்படும். தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவாக சென்னை ஐஐடி,பெங்களூர் ஐஐஎம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

மழைநீர் வடிகால்களில் ரூ.55 கோடியில்தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.மயானங்கள் ரூ.14 கோடியில் சீரமைக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் மெரினாபோன்ற இடங்களில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் 105 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.

ரூ.1.35 கோடியில் நாய்கள், கால்நடைகளைப் பிடிக்க 11 வாகனங்கள் வாங்கப்படும். 10 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.3.25 கோடியில் சீருடைவழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

காங்கிரஸ் கவுன்சிலர்கள்: ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து எம்.எஸ்.திரவியம் தலைமையில், காங்கிரஸ் கவுன்சிலர்கள் சி.ராஜசேகரன், டில்லிபாபு உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து மாமன்றக்கூட்டத்துக்கு வந்தனர். இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x