Published : 21 Sep 2017 10:55 AM
Last Updated : 21 Sep 2017 10:55 AM
தமிழ்நாட்டுச் சிற்றுண்டி வகைகளில் இட்லிக்கு மிஞ்சியது எதுவுமில்லை. இட்லி பெயரைச் சொல்லியே வாடிக்கையாளர்களை வளைக்கும் ஓட்டல்கள் தமிழ கத்தில் நிறைய உண்டு. அப்படித்தான் கேரளத்தில் ராமசேரி இட்லியும் நூறாண்டுகளுக்கும் மேலாக தனது வாடிக்கையாளர்களை வசியம் செய்து வைத்திருக் கிறது!
சின்னதாய் ஒரு கடைதான். அங்கே, சின்னச் சின்ன மண் சட்டிகளில் மூன்று அடுக்கு விநோதமான இட்லி தட்டுகள் மூலம் தினமும் ஆயிரம் ரெண்டாயிரம் என இட்லி வார்க்கப்பட்டு வியாபாரம் களைகட்டுகிறது. அதுவே, கல்யாணம், கட்சி மாநாடு என்றால் இட்லி எண்ணிக்கை ஏழாயிரம், எட்டாயிரம் என ஏறுகிறது.
ராமஸ்சேரி இட்லி ஷாப்
கேரளத்தின் கஞ்சிக்கோட்டிலிருந்து பாறை வழியாக சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம் ராமசேரி. இந்த ஊரின் முகப்பிலேயே வந்துவிடுகிறது அந்த இட்லிக் கடை. ‘ராமஸ்சேரி இட்லி ஷாப்’ என்ற பெயர் தாங்கி நிற்கும் அந்தச் சிறிய கடைக்குள், இருபது பேர் அமர்ந்து சாப்பிடலாம். நம்ம ஊர்ப்பக்கம் ஊற்றப்படும் ஆப்பத்தின் நடுவில் உப்பலாக இருக்குமே.. அதை மட்டும் வெட்டி எடுத்தால் எப்படி இருக்குமோ அதுதான் ராமசேரி இட்லி!
சென்னை, கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், ஹைதராபாத், பெங்களூரு மட்டுமில்லாமல் துபாய், மஸ்கட், லண்டன் என வெளிநாடுகளுக்கு பயணிக் கிறவர்களும்கூட வழித் துணைக்கு ராமசேரி இட்லியை வாங்கிக் கட்டிக்கொண்டு போகிறார்கள்.
“இதுக்கு முந்தி இங்க என்னோட மாமியார் அம்மணி யம்மாள் இட்லி சுட்டு வித்துட்டுருந்தாங்க. அவங்களுக்கு முந்தி அவங்க மாமியார் பார்த்தாங்க” என்று சொல்லும் இட்லிக் கடை பாக்கியலட்சுமி அம்மாள், “நூறு வருஷம் மின்னால எங்க பரம்பரையில சித்துாரியம்மா அப்படிங்கிற வங்கதான் இந்த இட்லி வியாபாரத்தை ஆரம்பிச்சது. அப்போ, வயல்ல வேலை செய்யறவங்களுக்கு கூடையில வச்சு இட்லி விக்கப் போவாங்க. படி நெல்லுக்கு இவ்ளோ இட்லின்னு கொடுப்பாங்க.
ஒரு கடை; ஆறு குடும்பங்கள்
மண்ணுல செஞ்ச சட்டி வாங்கி, அதில புட்டுக்கோல் வச்சு எளந்துணிய விரிச்சு மாவு ஊத்தித்தான் இட்லி சுடுவாங்க. அதையே சல்லடை மாதிரி தட்டு செஞ்சு அதுல ஊத்திப் பாத்துருக்காங்க. அது ரொம்ப மெது மெதுப்பா வந்ததோட, ரெண்டு மூணு நாளைக்கு மேலயும் இட்லி கெடாம இருந்திருக்கு. இப்பவும் அதே பக்குவத்துலதான் இட்லி சுடுறோம். ஆனா, ரெண்டு நாளைக்கு மேல கியாரண்டி சொல்ல முடியல. நெல்லு, உளுந்து எல்லாத்திலும் கெமிக்கல் வந்துடுது இல்லீங்களா.. அதுதான் இப்பக் கெட்டுப் போயிடுது” என்கிறார்.
தினசரி இந்தக் கடையில் மட்டுமே ஆயிரத்திலிருந்து ஆயிரத்தி ஐநூறு இட்லி வரை விற்பனையாகிறதாம். ஒரு இட்லியின் விலை ஆறு ரூபாய். முன்கூட்டியே ஆர்டர் தந்தால் எத்தனை ஆயிரம் இட்லியும் கிடைக்குமாம்!
”சித்தூரியம்மாவுக்கு பூர்வீகம் தஞ்சாவூர். அவங்க வழிவந்த வாரிசுகள்னு பார்த்தா இப்ப இருவத்தஞ்சுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ராமசேரியில இருக்கு. அதுல ஆறு குடும்பம் மட்டும் இட்லி வியாபாரம் பார்க்கிறோம். கடைன்னு பார்த்தா இது ஒண்ணு மட்டும்தான் இருக்கு. பெரிய ஆர்டர்கள் வரும்போது ஆறு பேரும் பகிர்ந்துக்கிட்டு வேலையை முடிச்சுக் குடுப்போம்” என்கிறார் பாக்கியலட்சுமி அம்மாள்.
பொடியும் பக்கா சுவை
இவரது இட்லிக் கடையில் நான்கைந்து பேர் வேலை செய்கிறார்கள். ஒரு நபர் இரண்டு அடுப்புகளில் ஒரு மணி நேரத்தில் 100 இட்லிகளை வார்த்தெடுக்க வேண்டும் என்பது இவர் களுக்கான தினசரி டாஸ்க்! ஆறு மாதங்களுக்கு முன்பு, பாலக்காட்டில் நடந்த சமையல் போட்டியில் பாக்கியலட்சுமி அம்மாள் கடை இட்லிதான் முதலிடத்தைத் தட்டியதாம்! இட்லி எவ்வளவு பிரபலமோ அதுபோல இவர்களின் தயாரிப்பான இட்லிப் பொடியும் பக்கா சுவை; இரண்டு வருட மானாலும் கெட்டுப்போகாதாம். இதுவும் இப்போது வெளிநாடுகள் வரைக்கும் பார்சலாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT