Published : 24 Sep 2017 07:59 AM
Last Updated : 24 Sep 2017 07:59 AM
பல பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் பராமரிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். மாடித் தோட்டமும் இப்போது பல பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், அகளங்கன் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெறும் நெல் சாகுபடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி வளாகத்திலேயே நெல் சாகுபடி செய்கிறார்கள். பச்சைப்பயறும் உற்பத்தி செய்கின்றனர்.
நேரடி அறிவும், அனுபவமும்
இன்றைய இளம் தலைமுறையிடம் விவசாயம் பற்றிய அறிவு குறைந்து கொண்டே வருகிறது. பலருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியவில்லை. நமது பிரதான உணவான அரிசி எப்படி உற்பத்தி ஆகிறது என்பது பற்றிகூட தெரியாத மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும் நமது பிரதான தொழிலான விவசாயம் பற்றிய நேரடி அறிவும், அனுபவமும் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் பள்ளி வளாகத்தில் நெல் சாகுபடி செய்வதாகக் கூறுகிறார் அகளங்கன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.மல்லிகா.
அவர் மேலும் கூறியதாவது:
வேளாண்மை பற்றிய முக்கியத்துவத்தை மாணவர்களிடம் உணரச் செய்வதை எங்கள் பள்ளியின் இலக்காக தீர்மானித்தோம். இதனை எவ்வாறு நிறைவேற்றுவது என எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் கூடி விவாதித்தபோது, நெல் சாகுபடி செய்வது என முடிவு செய்யப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள சுமார் 3 சென்ட் நிலத்தை நெல் சாகுபடி செய்ய தேர்வு செய்தோம்.
நெல் விதைப்பு முதல் அறுவடை வரை..
அந்த நிலத்தை மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து பண்படுத்தினோம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நேரடி விதைப்பு முறையில் டி.கே.எம். நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெல் விதைப்பு, தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, இயற்கை முறையில் உரம் இடுவது, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, அறுவடை செய்வது, கதிரடித்து நெல்மணிகளை தனியாக பிரித்தெடுப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் உடனிருந்து கவனித்தார்கள். இவ்வாறு உற்பத்தி செய்த நெல்லை அரிசியாக மாற்றுவது எவ்வாறு என்பது பற்றியும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. கடைசியில் அந்த அரிசியில் பொங்கல் சமைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் உண்டு மகிழ்ந்தோம்.
நெல் அறுவடை முடிந்த பிறகு பச்சைப்பயறு விதைத்தோம். நெல் சாகுபடிக்கும், பயறு சாகுபடிக்கும் பல வேறுபாடுகள் இருப்பதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். உற்பத்தி செய்த பயறுகளை மாணவர்களுக்கே கஞ்சியாகச் சமைத்து வழங்கினோம்.
இந்த ஆண்டு நடவு முறையில் சாகுபடி செய்திருக்கிறோம். நேரடி விதைப்பு முறைக்கு மாறாக நடவு முறையில் நாற்றங்கால் தயார் செய்வது, நாற்று உற்பத்தி செய்து அதன் பிறகு நடவு செய்யும் முறையை மாணவர்கள் கற்றுக் கொண்டனர். ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்களும் நாற்று நட்டார்கள். தற்போது பாரம்பரிய நெல் ரகமான சீரகச்சம்பா நெல் நடவு செய்துள்ளோம்.
பள்ளியில் கை கழுவுவது உட்பட மாணவர்கள் பயன்படுத்தும் நீர் வயலுக்கு பாய்ச்சப்படுகிறது. பள்ளியி்ல் சேரும் உணவுக் கழிவுகள், பிற குப்பைகளை உரக் குழியில் சேமிக்கிறோம். இலை, தழைகளையும் உரக் குழியில் போட்டு மக்கச் செய்கிறோம். இயற்கையான முறையில் உரம் கிடைக்கிறது.
வயல் அருகே தகவல் பலகை வைத்துள்ளோம். சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் பற்றிய விவரங்கள், சாகுபடி மேற்கொள்ளும் முறை, தேதி வாரியாக வயலில் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் முதலானவற்றை தகவல் பலகையில் பதிவு செய்து வருகிறோம். சாகுபடி முடிந்து எல்லா தகவல்களையும் தொகுக்கும்போது, சாகுபடி பற்றிய அனுபவப்பூர்வமான கல்வி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் அருகே உள்ள மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, அங்கு இயற்கை உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு உள்ளிட்டவை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இந்த பயிற்சியின் பலனாக இப்போது பள்ளி வளாகத்தில் மண் புழு தயாரிக்கும் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு தலைமை ஆசிரியர் மல்லிகா கூறினார்.
வழக்கமான பாடத்திட்டம் சார்ந்த கல்வியிலும் இந்த பள்ளி சிறந்து விளங்குகிறது. இது பற்றி பள்ளி ஆசிரியர் எம்.செல்வராஜ் கூறியதாவது:
பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை வழக்கமான கற்பித்தல் முறையில் இல்லாமல் மாறுபட்ட முறையில் கற்பிக்கிறோம். பாடத்தில் உள்ள தகவல்களை வில்லுப்பாட்டு வடிவில் மாற்றி கலைநிகழ்ச்சியாக நடத்திக் காட்டுகிறோம். அதேபோல் பாடத்தில் உள்ள கருத்துகளை பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் வகுப்பறைகளில் எடுத்துக் கூறுகிறோம். பொம்மலாட்டத்துக்கு தேவையான பொம்மைகளை ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்தே உருவாக்குகிறோம். இதுபோன்ற எல்லா நடவடிக்கைகளின்போதும் எங்கள் அருகிலேயே இருக்கும் மாணவர்களுக்கு நாங்கள் கற்பிக்க வேண்டிய கருத்துகள் மிக எளிதாகப் புரிய வைக்கப்படுகின்றன.
இயற்கையான சூழலில் வாசிப்பு
நூலகம் என்றாலே அறைகளில் அமர்ந்து படிப்பதுதான் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. ஆனால் எங்கள் பள்ளியில் திறந்தவெளியில் தோட்டத்தைச் சுற்றி மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். இயற்கையான சூழலில் மாணவர்கள் மிகவும் விருப்பத்தோடு நூல்களை வாசிக்கின்றனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முக்கிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும். அதில் ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் பங்கேற்கின்றனர். இவ்வாறு ஆசிரியர் செல்வராஜ் கூறினார்.
இயற்கையான சூழல்; பசுமையான பள்ளி; வாழ்க்கையோடு நேரடித் தொடர்பு கொண்ட வேளாண்மை உள்ளிட்டவை பற்றி கள அனுபவத்துடன் கூடிய கல்வி; இதனால் மாணவர்களிடம் இயல்பாகவே அதிகரிக்கும் கற்றல் திறன்கள்; அகளங்கன் அரசு தொடக்கப் பள்ளி ஓர் ஆச்சரியப் பள்ளி என்பதில் வியப்பேதும் இல்லை.
தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: 94438 75211.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT