Published : 27 Mar 2023 05:55 PM
Last Updated : 27 Mar 2023 05:55 PM
சென்னை: "திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,286 இருக்கின்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, ஒன்றிய அரசு 25 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒரே ஆண்டில் தந்திருக்கிறது.
அவற்றையெல்லாம் தற்பொழுது எங்கேங்கே அமைப்பது என்று அரசாணைகள் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே நான் சொன்ன விதிமுறைகளின்படி, ஒரு மருத்துவமனைக்கும் மற்றொரு மருத்துவமனைக்குமிடையே குறைந்தபட்சம் 8 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும் என்ற வகையில், தமிழ்நாட்டிலிருக்கின்ற கிராமப்புறங்களில் போதுமான அளவில் மருத்துவமனைகள் அமைந்திருப்பதாக ஒன்றிய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது.
மேலும் நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, கிராமப்புறங்களில் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவக் கட்டமைப்புகள் அமைந்திருக்கின்றன என்ற வகையில் புள்ளிவிவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, தமிழக முதல்வர், கடந்த 2 மாதங்களுக்கு முன்னால், ஒன்றிய அமைச்சரை எங்களைச் சந்திக்கச் சொல்கிறபோது, இன்னும் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
மேலும் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 500 படுக்கைளுடன் கூடிய மருத்துவமனையை அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில் 26 சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகிறது. இருதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT