Published : 27 Mar 2023 01:13 PM
Last Updated : 27 Mar 2023 01:13 PM
சென்னை: “சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கிய காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கியுமிருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது கண்டிக்கத்தக்கது!
குற்றம் செய்தோரை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார். ஒருவர் புதிதாக திருமணமானவர் என கூறியதால், அவரை உயிர்நாடியில் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்டவர்கள் அதற்காக மருத்துவம் பெறுகின்றனர். உடல்களில் தழும்புகள் உள்ளன.
விசாரணை என்ற பெயரில் பல்வீர் சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர் சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல் துறை உயர்பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது
உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT