Published : 27 Mar 2023 01:17 PM
Last Updated : 27 Mar 2023 01:17 PM

''ஐயோ இன்றைக்கா...'' - சட்டப்பேரவைக்கு கறுப்பு சேலையில் வந்த வானதி ஸ்ரீநிவாசன் ‘அதிர்ச்சி’!

வானதி ஸ்ரீநிவாசனிடம் கேள்வி கேட்கும் விஜயதரணி

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு கறுப்பு சேலை அணிந்து வந்த பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசனிடம் அங்கிருந்த நிருபர்கள் "நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?" எனக் கேட்க, "ஐயோ இன்னிக்கா அது. எனக்குத் தெரியாதே" என்று கூறி சிரித்தபடியே நகர்ந்து சென்றார். அவரது கறுப்பு நிற ஆடையால் சட்டப்பேரவைக்கு வெளியேயும் உள்ளேயும் இன்று சில சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன.

முன்னதாக, ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (மார்ச் 27) காலை சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும், ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, "தடையாணை வாங்கியிருந்த வழக்கை எடுத்து நடத்தியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக வழக்கு தொடர்ந்தவரே தடை வாங்குகிறார். அதுவும் 24 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது ஜனநாயகப் படுகொலை.

இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம். சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். உள்ளிருப்புப் போராட்டமும் நடத்துவோம். எங்களது போராட்டம் பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரானது" என்று தெரிவித்தார்.

அதன்பின்னர் அவைக்கு வருகை தந்தார் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன். அப்போது அங்கிருந்த நிருபர்கள் வானதி ஸ்ரீநிவாசனிடம், "நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?" எனக் கேட்க, "ஐயோ இன்னிக்கா அது. எனக்குத் தெரியாதே" என்று கூறி சிரித்தபடியே நகர்ந்து சென்றார். சில அடிகள் அவர் நகர்ந்ததுமே அங்கு நின்றிருந்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, ''எங்களுக்கு ஆதரவா?'' என்று கேட்க, வானதி ஸ்ரீநிவாசன் ''இல்லை... இல்லை'' என்று சிரித்துக் கொண்டே தலை நிமிராமல் சொன்னார்.

பின்னர் பேரவைக்குள் சென்ற பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசனிடம் சபாநாயகர் அப்பாவு, "கறுப்பு ஆடையில் வந்துள்ளீர்களே. நீங்களும் அவர்களின் நிலைப்பாட்டினை ஆதரிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு வானதி ஸ்ரீநிவாசன், "எமர்ஜென்சி கால அடக்குமுறைகளை எதிர்த்து கறுப்பு ஆடையில் வந்துள்ளேன்" என்று கூறி சமாளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x