Published : 27 Mar 2023 10:46 AM
Last Updated : 27 Mar 2023 10:46 AM
சென்னை: ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (மார்ச் 27) காலை சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும் ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர்.
சட்டப்பேரவைக்குள் செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, "தடையாணை வாங்கியிருந்த வழக்கை எடுத்து நடத்தியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு தொடர்ந்தவரே தடை வாங்குகிறார். அதுவும் 24 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது ஜனநாயகப் படுகொலை. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம்.
சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். உள்ளிருப்புப் போராட்டமும் நடத்துவோம். எங்களது போராட்டம் பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரானது" என்று தெரிவித்தார்.
பதாகைகளுக்கு அனுமதி மறுப்பு: தொடர்ந்து சட்டப்பேரவைக்கு சென்ற காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பதாகைகளை எடுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவைக்குள் பதாகைகளுக்கு அனுமதியில்லை என்று மறுத்தார். இதனையடுத்து அவர்கள் பதாகைகளை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT