Published : 27 Mar 2023 07:58 AM
Last Updated : 27 Mar 2023 07:58 AM
சென்னை: சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானதாகும். இங்கு மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் நேர விரயமும், அலைச்சலும், பயணத்தில் சிரமமும் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி, அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயணிக்கலாம.
இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.
இதற்கான டெண்டர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை வரும் டிசம்பர் மாதம் முதல்பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஒரே மின்னணு பயணச்சீட்டைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில், போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இதை மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் முடியும்பட்சத்தில், வரும் டிசம்பர் மாதம்முதல் ஒரே மின்னணு பயணச்சீட்டின் கீழ் மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்கலாம்'' என்றனர்.
அதேநேரத்தில், ஒரே இ-டிக்கெட்டில் மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து என மூன்றிலும் பயணிக்கும் முறை அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பயணிப்பதற்கு குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணிக்க எவ்வளவு நேரமாகும் உள்ளிட்ட விவரங்கள் திட்டம் அமலாகும்போது தெரியவரும். குறைவான நேரத்திலும், செலவிலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த இந்த திட்டம் உதவியாக இருக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
- ஸ்ரீபாக்யலஷ்மி ராம்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT