Published : 27 Mar 2023 04:40 AM
Last Updated : 27 Mar 2023 04:40 AM

ராகுல் காந்தி தகுதி இழப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் - தமிழகத்தில் 70 இடங்களில் நடந்தது

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கோட்டில் நேற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்.பி பதவியில் இருந்து, ராகுல்காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று அறப்போராட்டம் நடத்தினர்.

தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸார் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், காந்தி நினைவிடத்துக்கு வெளியே காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:

நாட்டுக்காக உயிர்த் தியாகம்செய்த பிரதமரின் மகன், நாட்டின்ஒற்றுமைக்காக பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பாதயாத்திரை சென்ற ஒருவர், ஒருபோதும் நாட்டை அவமானப்படுத்த முடியாது. உயிர்த் தியாகம் செய்தவரின் மகனை தேச விரோதி என்கிறீர்கள்.

தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடை ஏற்படுத்துவது, நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. அராஜக ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம்வந்துவிட்டது. நாட்டின் ஜனநாயகத்துக்காக நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். பாஜகவினரின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

தொழிலதிபர் அதானி விவகாரத்தில் பிரதமர் குறித்து கேள்வி கேட்டதற்காக, ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு, மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, ‘‘நாட்டை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி, லலித் மோடியை விமர்சனம் செய்தால், ஆளும்கட்சிக்கு என்னகவலை? நாட்டுக்காக சேவையாற்றியவரை நீங்கள் தண்டிக்கிறீர்கள்.நாட்டைக் கொள்ளையடித்தவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள். மக்களுக்காகவும், வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத் துக்காகவும் ராகுல் போராடுகிறார்’’ என்றார். இதேபோல, இமாச்சலப் பிரதேம், ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, குஜராத்திலும் காங்கிரஸார் நேற்று போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில்...: தமிழகத்தில் 70 இடங்களில் அறப்போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

சென்னையில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் எம்.பி.க்கள் திரு நாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில், விஜய் வசந்த் எம்.பி., மாநிலத் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோரும், திருவொற்றியூர், பெரம்பூர், அமைந்தகரை, தேனாம்பேட்டை, போரூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாநில முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, ஏ.செல்லகுமார் எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x