Published : 07 Sep 2017 11:50 AM
Last Updated : 07 Sep 2017 11:50 AM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வங்கிக் கடன் நிலுவைக்காக டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் மனமுடைந்த விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரி நாதன் (60). இவர் தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று டிராக்டர் ஒன்று வாங்கியிருந்தார். இந்நிலையில், விவசாயம் பொய்த்ததால் டிராக்டருக்கு கடந்த இரண்டு மாதங்களாக கடன் தவணையை செலுத்தவில்லை.
இதனால், கடன் தவணையை செலுத்தும்படி வங்கியிலிருந்து தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்கள் அவகாசம் தருமாறு வங்கியிடம் வெள்ளியங்கிரி நாதன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், வங்கி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று (புதன்கிழமை) காலை டிராக்டரை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
டிராக்டரை மீட்டுத்தருமாறு பல்லடம் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்க முயன்றுள்ளார் வெள்ளியங்கிரி நாதன். ஆனால், டிராக்டரை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வங்கி அதிகாரிகள் பெற்றுவைத்திருந்ததால் நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது என போலீஸ் தரப்பு தெரிவித்துவிட்டது. இதனால், மனமுடைந்த விவசாயி காவல் நிலையத்துக்கு எதிராகவே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு சுலோச்சனா என்ற மனைவியும், நாகசிவன் (14) என்ற மகனும் உள்ளனர்.
விவசாயி தற்கொலைக்கு நீதி கேட்டு பல்லடம் அனைத்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT