Published : 27 Mar 2023 07:35 AM
Last Updated : 27 Mar 2023 07:35 AM
சென்னை: ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பயன்பாட்டில் உள்ள பிற மொழி கலந்த தமிழ்ச் சொற்கள் மற்றும் அதற்கு இணையான தனித்தமிழ்ச் சொற்கள் குறித்த பதாகை சென்னை, தியாகராய நகரில் உள்ள பாண்டிபஜார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பாமக நிறுவனரும், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான ராமதாஸ் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் கடைகளின் பெயர்களை தமிழில் வைப்பது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தமிழை தொலைத்து விட்டோம்.தமிழ் எது, பிறமொழி எது என தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சவுந்தரபாண்டியனார் அங்காடி என இருந்த பெயரை பாண்டிபஜார் என மாற்றிவிட்டோம். சென்னையில் தமிழ் எங்கும் இல்லாததால் லண்டனில் இருப்பதுபோல் தெரிகிறது.
1977-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஒரு பெயர் பலகையில் 10 பகுதி இருக்குமென்றால் அதில் 5 பகுதி தமிழாக இருக்க வேண்டும். 3 பகுதி ஆங்கிலமாகவும் மற்ற 2 பகுதி வணிகர்கள் விரும்பும் மொழியிலேயே இருக்கவேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இப்போது கூடதமிழைத் தேடி பயணம் மேற்கொண்டேன். ஆனால் தமிழை எங்கும் பார்க்க முடியவில்லை. அதே நேரம் பெயர்ப் பலகையில் தமிழ் இடம்பெற வேண்டும் என்ற வலியுறுத்தலை ஏற்பதாக வணிகர் சங்கங்களும் உறுதியளித்துள்ளன. அவர்களின் ஆதரவு அவசியம்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழே இருக்காது. ஒரு மாத காலத்துக்குள்ளாக அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைவைக்க வேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம். வணிகர்களுக்கு அந்த அவகாசம் தேவைப்படாது.
ஏனென்றால் வணிகர்கள் அனைவரும் தமிழ் விரும்பிகள். தனித்தமிழில் பெயர்ப் பலகை அமைத்தால் என் கையாலே பூச்செண்டு கொடுத்து பாராட்டுவேன். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. அதேநேரம், தமிழகத்தில் எங்கும் தமிழ்;எதிலும் தமிழாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பாமக கவுரவ தலைவரும், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான கோ.க.மணி கூறும்போது, ‘‘தனித்தமிழ்ச் சொற்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 கலப்பு சொற்களும், அதற்குஇணையான தமிழ்ச் சொற்களையும் பதாகை மூலம் எடுத்துரைத்துள்ளோம்.
இதே போல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதாகைகளாக வைக்குமாறு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்‘‘ என்றார்.
நிகழ்வில், பாமக இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT