Published : 03 Sep 2017 01:35 PM
Last Updated : 03 Sep 2017 01:35 PM
கிருஷ்ணகிரியில் சாலைவிபத்தில் 4 பேர் பலியானதை அடுத்து பொதுமக்கள் மேம்பாலம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய காருக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
அங்குமிங்கும் ஓடிய மக்களில் சிலர் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி., மகேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி?
கிருஷ்ணகிரி கந்திக்குப்பம் நெடுஞ்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த கார் சென்னை பதிவெண் கொண்டது. அதன் பின்னால் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் பெங்களூரு பதிவெண் கொண்டது. பெங்களூரு பதிவெண் கொண்ட வாகனம் சென்னை பதிவெண் காரின் பின்புறத்தில் மோதியுள்ளது. இதில் சென்னை பதிவெண் காரின் பானட் திறந்து கொள்ள காரை ஓட்டிய முனிராஜ் கட்டுப்பாட்டில் இருந்து கார் விலகியது. அந்த கார் சாலையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சாலையோரத்தில் நின்றவர்கள் 4 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கு கூடியிருந்த மக்கள், பெங்களூரு பதிவெண் கொண்ட காரை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். காரை ஓட்டிவந்த அஸ்வின் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
இறந்தவர்களின் விவரம்:
இந்த விபத்தில் பரத்குமார் (17) கந்திக்குப்பம், கோகுல் (18) கந்திக்குப்பம், வனஜா (48), தர்மர் (40) ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர். சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்:
சாலை விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே கந்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். நீண்ட நாட்களாக அப்பகுதியில் மேம்பாலம் கோரிவரும் அம்மக்கள் இன்று ஒரே நாளில் 4 பேர் பலியானதால் மேம்பாலம் கட்டியே ஆக வேண்டும் என கோஷமிட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பர்கூர், கிருஷ்ணகிரி டிஎஸ்பி.,க்கள் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் எஸ்.பி., மகேஷ்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் பேசினார். ஆனால், எதுவும் எடுபடவில்லை. எனவே போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது சிலர் வாகனங்கள் மீது கல்வீசினர். இதில் அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்களின் கண்ணாடி உடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT