Published : 27 Mar 2023 06:08 AM
Last Updated : 27 Mar 2023 06:08 AM
ராமேசுவரம்: பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து வந்த 225 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு. ஓராண்டாகியும் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்படவில்லை.
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து அகதிகளாக வர தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 19,316 குடும்பங்களைச் சேர்ந்த 58,492 பேர் இங்கு தங்கியுள்ளனர்.
இந்த முகாம்களில் குடும்பத் தலைவருக்கு மாதம் 1,500, 12 வயதுக்கு மேல் உள்ளோருக்கு ரூ.1000, 12 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு ரூ.500 உதவித்தொகை, வருடாந்திர கல்வி உதவி, வீடு, மின்சாரம், குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. அவர்கள் வெளியே கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், 2012-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் இருந்து அகதிகளாக வருவோரை காவல் துறையினர் கைது செய்து பாஸ்போர்ட் ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாக வும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 23.3.2022 முதல் தனுஷ்கோடிக்கு வந்த 225 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசால் அகதிகளுக்கு வழங்கப் படக்கூடிய உதவித் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. மேலும் தமிழக அரசு மத்திய அரசிடம் தற்போது அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்களை எப்படி கருதலாம் என கருத்துக்கேட்டு மத்திய அரசின் முடிவுக்காக கடந்த ஓராண்டாக காத்திருக்கிறது.
தற்போது இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக பதிவு செய்து ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உடனடியாக பிரதமரையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்பதே மண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT