Published : 27 Mar 2023 06:02 AM
Last Updated : 27 Mar 2023 06:02 AM
ராணிப்பேட்டை: வாலாஜாவில் திறந்தவெளி கழிவுநீர் குளமாக மாறியுள்ள நல்ல தண்ணீர் குளத்திதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நவாப் காலத்தில் குடிநீர் மற்றும் பல்வேறு தேவை களுக்காக 20-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து மக்கள் பயன்படுத்தியுள்ளனர். காலப்போக்கில் அவைகள் மாசடைந்து கிடக்கின்றன.
அந்த வகையில், வாலாஜா நகராட்சியில் அரசு தலைமை மருத்துவமனை காந்திநகரில் உள்ள நல்ல தண்ணீர் குளமும், ஒரு காலத்தில் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நவாப் காலத்தில் அமைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் குளத்தை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து திறந்தவெளி கழிவுநீர் குளமாக மாறியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "நவாப் காலத்தில் வாலாஜா ஒரு சிறந்த வணிக நகரமாக இருந்தது. தென்னிந்தியாவில் முக்கிய வணிக நகரத்தில் இதுவும் ஒன்று. பாக்கு, உப்பு, பஞ்சு, சொர்ணம் உட்பட 18 வகையான தொழிற்பேட்டைகள் சேர்ந்து வாலாஜாபேட்டையாக இருந்தது.
அந்தந்த தொழில்களின் பெயரிலேயே, அந்த பகுதிகளும் அழைக்கப்பட்டன. நவாப்களுக்கு பிறகு வந்த ஆங்கிலேயர்களும், வாலாஜா நகரத்தில் சிறப்பாக உள்கட்டமைப்புகளை அமைத்து நிர்வகித்து வந்தனர்.
வணிகம் சார்ந்த தொழில் நடக்கும் இடத்தின் அருகே கோயில் அதன் அருகே நல்ல தண்ணீர் குளங்களை முறையாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், நாளடைவையில் தொழில்கள் எல்லாம் சென்னை நோக்கி நகர, இங்கு வணிகமும் மங்கத் தொடங்கியது. குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட குளங்கள், தனது அடையாளத்தை இழந்து காணப்படுகிறது.
அந்த வகையில், வாலாஜா அரசு மருத்துவமனை பின்புறம் காந்திநகரில் உள்ள நல்ல தண்ணீர் குளம் ஆக்கிரமிப் புகளாலும், கழிவுநீர் கலப்பதாலும் மாசடைந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் மாறிவிட்டது. இதை சீரமைத்து மீண்டும் நல்ல தண்ணீர் குளமாக மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து வாலாஜா நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பரமுராசு கூறுகையில், "நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரும் குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இங்கு ஆக்கிரமிப்புகள் செய் துள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங் கப்பட்டுள்ளது. குளத்தை சீரமைக்க அரசிடம் நிதி கேட்டுள் ளோம். நிதி வந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT