Last Updated : 26 Mar, 2023 05:41 PM

 

Published : 26 Mar 2023 05:41 PM
Last Updated : 26 Mar 2023 05:41 PM

இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: எல். முருகன்

மதுரை: இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''பேராசிரியர் பரமசிவனின் 25வது ஆண்டு நினைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். அவரது நினைவாக வாரந்தோறும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. சவுராஷ்ட்ரா தமிழ் சங்கம் சார்பில், மதுரைக்கும் சோமநாத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு வாரம் தமிழ் விழா நடைபெற இருக்கிறது.

சவுராஷ்டிரா தமிழக தொடர்புகள் குறிப்பாக மதுரை, காஞ்சிபுரம், பரமக்குடி, சேலம் உள்ளிட்ட நகரங்களிலுள்ள வர்த்தக தொடர்புகள் குறித்து இதில் பேசப்படும். இதேபோன்று, காசி தமிழ் சங்கம் சார்பில் மதுரைக்கும்-காசிக்கும், மதுராவுக்கும் - ராமேஸ்வரத்திற்கும் மற்றும் காசிக்கும் - தென்காசிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான காசியிலிருந்து தமிழகத்துடனான உறவுகள் குறித்தும், பாரம்பரிய உணவுகள் மற்றும் காஞ்சிபுரம் பட்டு சேலைக்கும், பனாரஸ் பட்டு சேலைக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை-இந்திய மீனவர்கள் குழுக்களின் சார்பில், மார்ச் முதல் வாரத்தில் நடந்த பேச்சுவார்த்தையால் கைதான தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர்.

மேலும், அவர்களின் படகுகளை மீட்பது குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் மீனவர்கள் குழுக்களின் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்படும். மீனவர்களுக்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு குரூப் இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்படும் சேதங்களை அரசு வழங்கும். ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கம் என்பது நீதிமன்ற நடவடிக்கை. இதில் யாரும் தலையிட முடியாது'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x