Published : 26 Mar 2023 12:56 PM
Last Updated : 26 Mar 2023 12:56 PM
சென்னை: "ஆன்லைன் சூதாடத்தை எல்லா வடிவத்திலும் தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை நிராகாித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஆன்லைன் சூதாட்டத்தை எல்லா வடிவங்களிலும் தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை நிராகாித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட வேண்டும்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு இல்லாத அதிகாரம், ஆளுநருக்கு எப்படி வருகிறது? முதலில் யார் அவர்? அவருடைய வேலை என்ன? அவருடைய அதிகார எல்லை எது? அந்தப் பதவி எதற்கு? 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு, மக்கள் நலன் சார்ந்த திட்டத்தையும், சட்டத்தையும் கொண்டுவரும்போது, அதை ஏற்க முடியாது, அதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறுவதற்கு ஆளுநர் யார்? எல்லாம் கொடுமை" என்றார்.
அப்போது ஆளுநர் நியமனங்களில் மாநில அரசின் கருத்துக் கேட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னைக் கேட்டால் ஆளுநர் நியமனமே அவசியமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. அரசு ஆளுநரை மதிக்காமல் செல்ல வேண்டியதுதானே. அவ்வாறு சென்றால் என்ன செய்துவிடுவார்கள்? ஆளுநருக்கு ஏக்கர் கணக்கில் மாளிகை, காவல்துறை பாதுகாப்பு, என மக்கள் பணத்தில் வீண் செலவு, வீண் சம்பளம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT