Published : 26 Mar 2023 12:20 PM
Last Updated : 26 Mar 2023 12:20 PM
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை தமிழக ஆளுநர் உணர வேண்டும்; இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார். அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு அதற்கு அடிமையான ஒருவரை கடனாளியாக்கி, தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை தான் சான்று. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 48-ஆவது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 19-ஆவது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை. இது தொடர்கதையாகிவிடக்கூடாது.
ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை ஆளுநர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான துப்பாக்கி தொழிற்சாலையின் மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் ரவி சங்கர்(37). ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்ட இவர், அதில் விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதற்காக அவர், தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமலும், ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமலும் தவித்த ரவி சங்கர், அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT