Published : 26 Mar 2023 07:18 AM
Last Updated : 26 Mar 2023 07:18 AM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கான தேர்வு ஏப்.25-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட்சி 10-வது மண்டல குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மகளிருக்கான ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகளில் பெறும் கடன்களின் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ரூ.2,574 கோடி அளவுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஏற்பட்டிருக்கிறது. இந்த எச்3என்1 என்ற வைரஸானது இந்தியா முழுவதும் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கடந்த நிதிநிலை அறிக்கையின்போது 4,308 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் மூலமாக பணி நியமன ஆணைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 1,021 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு தற்போது முடிவுற்றதால் பணியிடங்களை நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 1,021 பணியிடங்களுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களுக்கு வரும் ஏப்.25-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல், 986 மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்.26, 27-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டுதேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மே மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT