Published : 26 Mar 2023 07:28 AM
Last Updated : 26 Mar 2023 07:28 AM
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பாஜக அரசு பறித்ததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கட்சி ரீதியிலான 76 மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஒற்றுமை பயணம் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்று, எதிர்க்கட்சிகளின் உரிமைக்குரலாக ஒலித்த தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இருக்கும் உறவு குறித்து குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி, தொடர்ந்து கூறி வருகிறார்.
இதை பாஜகவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்அவரது உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் ஜனநாயக விரோத செயலை செய்திருக்கிறார் கள்.
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே அவசர அவசரமாக அவரது எம்.பி பதவிபறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி எல்லைகளை கடந்து கோடிக்கணக்கான மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் மார்ச் 26-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலைமுன்பு ஒரு நாள் சத்தியாக்கிரக அறப்போராட்டத்தை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தும் படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது.
இதையொட்டி தமிழகத்தில் உள்ள 76 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அறப்போராட்டத்துக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் வகுப்புவாத பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார். சென்னையில் 7 இடங்களில் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT