Published : 26 Mar 2023 04:10 AM
Last Updated : 26 Mar 2023 04:10 AM

வீடுகளில் சேகரிக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு: விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மதுரை மாநகராட்சி

மதுரை: வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயார் செய்து விவசாயிகள், பொதுமக்களுக்கு மாநகராட்சி இலவசமாக வழங்குகிறது.

மதுரை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 650 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், 64 சதவீதம் வீட்டு உபயோகக் கழிவுகள். மட்காத குப்பையை வெள்ளக்கல் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச்சென்று பாதுகாப்பாக அழிக்கப்படுகிறது. மட்கும் குப்பைகளை தரம் பிரித்து அவற்றை, மாநகராட்சி இயற்கை உரம் தயாரித்து வருகிறது.

இதற்காக வெள்ளக்கல் மட்டுமின்றி வார்டுகளிலும் 37 இடங்களில் நுண்ணுயிர் உரக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று, நான்கு வார்டுகளில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பை அருகில் உள்ள நுண்ணுயிர் உரக் கிடங்குக்கு கொண்டு சென்று 49 நாட்கள் வரை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

கரோனாவுக்கு முன் இந்த இயற்கை உரம் விவசாயிகளுக்கு மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் உரத்தை வாங்க ஆர்வம்காட்டவில்லை. கரோனாவில் மிகஅதிகளவில் இயற்கை உரம் அந்தந்தக் கிடங்குகளில் தேக்கமடைந்தது. அதனால், கரோனாவுக்கு பிறகு மாநகராட்சி இயற்கை உரத்தை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்க முன்வந்தது.

விவசாயிகள், பொதுமக்கள் இயற்கை உரத்தை, அந்தந்த உரக் கிடங்குகளில் ஆதார் அட்டை நகல் கொடுத்து தேவையான அளவு பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்தது. தற்போது ஏராளமானோர் இயற்கை உரத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். வெள்ளக்கல் உரக்கிடங்கில் மட்டுமே 60 டன் இயற்கை உரமும், மற்ற 37 உரக்கிடங்குகளில் 4 ஆயிரம் டன் இயற்கை உரமும் கையிருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: உரக் கிடங்குகளில் நுண்ணுயிர் கலவைகளை சரியான விகிதத்தில் சேர்த்து குப்பையை மட்க வைத்துதரமான இயற்கை உரம் தயாரிக்கிறோம். ஒவ்வொரு உரக்கிடங்கிலும் சராசரியாக 3 டன் முதல் 5 டன் வரை தயாரிக்கிறோம்.

பரிசோதனை முறையில் நாங்களே உரக் கிடங்குகள் அருகே உள்ள மாநகராட்சி காலி இடங்களில் காய்கறி செடிகளை நட்டு இயற்கை உரத்தை இட்டு வளர்க்கிறோம். அதில் காய்கறிகள் அதிகளவில் கிடைக்கின்றன. அந்தக் காய்கறிகளை உரக் கிடங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குகிறோம். அதனால், இயற்கை உரத்தை விவசாயிகள் நம்பி வாங்கிச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x