Published : 25 Mar 2023 08:22 PM
Last Updated : 25 Mar 2023 08:22 PM

சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு: ஒரு மாதத்தில் தொடங்க அறிவுறுத்தல்

ஆய்வுக் கூட்டம்

சென்னை: சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.320 கோடிக்கான பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் மழைக் காலங்களில் தண்ணீர் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 25) ஆய்வுக் கூட்டம் நடைற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்கன், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 15 மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பல்வேறு துறைகளின் பணிகள் நடைபெறும் வேகம் குறித்து கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வள ஆதாரத் துறை மூலம் தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசித்து, அவைகளுக்கு உடனடியாக ஒப்பந்தங்கள் கோரி பணிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க அறிவுறித்தினார்.

சென்ற ஆண்டு நடந்த பணிகளில் மீதமுள்ள பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டார். அதற்கான கால அட்டவணைகளை தயார்செய்து, ஆகஸ்ட், 2023-க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுரை வழங்கினார். பணி நடைபெறும் இடங்களில், தரம் மற்றும் பாதுகாப்பில் எந்த குறைபாடும், தொய்வும் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அனைத்து மண்டலங்களின் இந்திய ஆட்சிப்பணி கண்காணிப்பு அலுவலர்கள் பணிகள் நடைபெறும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து, பொது மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாவண்ணம் அனைத்து பணிகளையும், இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்குமுன் முடிக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x