Published : 25 Mar 2023 07:53 PM
Last Updated : 25 Mar 2023 07:53 PM
கடலூர்: மங்களூரில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர், திமுகவினர் கோரும் மாமூலை வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால், அந்தக் கடை மூடப்பட்டு 6 நாட்களான ஆன நிலையில், அதைத் திறக்கக் கோரி மது பாட்டில் வாடிக்கையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மங்களூரில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் விற்பனையாளர் ரமேஷ். இவர் திமுகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறுது. இந்த நிலையில், விற்பனையாளர் ரமேஷிடம், அதே பகுதியில் பார் நடத்திவரும் திமுகவினர் சிலர் சென்று விற்பனை அடிப்படையில், தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தர வேண்டுமென கட்டாயப்படுத்துவதாகவும், தான் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யாததால் தன்னால் தர இயலாது என ரமேஷ் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவுப்படி கடை கடந்த 20-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மது வாடிக்கையாளர்கள் தொலைவில் உள்ள மற்றொரு டாஸ்மாக் செல்ல வேண்டியிருப்பதால், கடையை திறக்கக் கோரி கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து விற்பனையாளர் ரமேஷ் கூறுகையில், ”நான் 2003-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளேன். தற்போது கரூரைச் சேர்ந்த சில திமுகவினர் விற்பனை அடைப்படையில் கமிஷன் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர். நான் தர இயலாது எனக் கூறிவிட்டேன். இந்த நிலையில், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கடையை மூடச்சொல்லிவிட்டதால், கடை 6 நாட்களாக மூடப்பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ”அப்பகுதி மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததால் கடை மூடப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT