Published : 19 Sep 2017 11:45 AM
Last Updated : 19 Sep 2017 11:45 AM
அமைச்சர் செல்லூர் கே. ராஜூ நேற்று முன்தினம் ‘திமுக செயல் தலைவராக மு.க. அழகிரி இருந்திருந்தால் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருப்பார் என அவர் பேசிய கருத்து திமுகவில் மட்டுமின்றி அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாவட்ட திமுகவில் முன்பு மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி பார்முலாவையே உருவாக்கினார். திமுக 2016-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற பிறகு மு.க. அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். மு.க.அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அதனால் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகி விட்டனர். திமுகவினர் மு.க. அழகிரியை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சர் செல்லூர் கே. ராஜூ திடீரென செய்தியாளர்களிடம், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினால் அதிமுகவுக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது. ஸ்டாலினுக்கு பதிலாக மு.க.அழகிரி இந்நேரம் செயல் தலைவராக இருந்திருந்தால் அவர் அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுத்திருப்பார். ஸ்டாலினால் சுயமாக செயல்பட முடியவில்லை. அவரை சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். தென் மாவட்டத்தில் மு.க. அழகிரி ஒரு சக்தியாக இருந்ததால்தான், அவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து பேசினார் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு திமுகவில் மட்டுமின்றி, அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அதிமுகவினர் கூறியதாவது: திமுகவின் உள்கட்சி பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட மு.க.அழகிரியை கண்டு அதிமுகவினர் பயந்ததுபோலவும், அதனாலேயே, ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்ததாகவும் அமைச்சர் கூறியிருப்பது சரியல்ல. ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஆதிக்கமே மதுரை அதிமுகவில் அதிகமாக இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு பெற ஆரம்பித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.பி.உதயகுமார் நெருக்கமாக இருந்தார். எடப்பாடிக்கும், டிடிவி.தினகரனுக்கு மோதல் முற்றியபோது அமைச்சர்கள் அனைவரும் டிடிவி. தினகரனை கடுமையாக விமர்சித்த போதும் செல்லூர் கே.ராஜூ மட்டும் அமைதியாக இருந்தார். அதனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ-ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறித்த டிடிவி.தினகரன், செல்லூர் கே.ராஜூவின் மாநகர் செயலாளர் பதவியை மட்டும் பறிக்கவில்லை.
பொதுக் குழுவில் சசிகலாவை நீக்கும் தீர்மானத்தில் கையெழுத்து போட்டதால் செல்லூர் கே.ராஜூவிடம் இருந்த மாநகர செயலாளர் பதவியை டிடிவி.தினகரன் பறித்தார். அதனால், தற்போது முன்புபோல் மீண்டும் கட்சியில் செல்வாக்கு பெற செல்லூர் கே.ராஜூ, மு.க.அழகிரியை புகழ்வதுபோல ஸ்டாலினை சீண்டிப் பார்த்துள்ளார் என்றனர்.
திமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: மு.க.அழகிரியே அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்டுக்கோப்பாக இருக்கிறது. அதிமுகவில் இழந்த செல்வாக்கை பெற ஸ்டாலினை வம்புக்கு இழுத்து மற்றவர்கள் கவனத்தை பெற அவர் திட்டமிட்டே இவ்வாறு பேசியுள்ளார். யதார்த்தமாக அவர் பேசவில்லை. அவரது இந்த பேச்சை நாங்கள் காமெடியாகத்தான் பார்க்கிறோம் என்றனர்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆதரவாளர்களிடம் பேசியபோது, அமைச்சர் உண்மையைத்தான் சொல்லி உள்ளார். பலமான எதிர்கட்சித் தலைவராக இருந்திருந்தால், அவர் கண்டிப்பாக அதிமுகவுக்கும், ஆட்சிக்கும் கடும் நெருக்கடி அளித்திருப்பார். அதிமுக பல அணிகளாக பிரிந்தபோதும், அவரால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. அதிமுகவில் மாநகர செயலாளர், அமைச்சராக செல்லூர் கே.ராஜூ செல்வாக்குடன்தான் இருக்கிறார். அப்படியிருக்கும்போது எதற்காக மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க அவர் இப்படி பேச வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT