Published : 25 Mar 2023 06:08 AM
Last Updated : 25 Mar 2023 06:08 AM
விருதுநகர்: சென்னை-செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், மீண்டும் திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
2013-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி முதல் சென்னை- காரைக்குடி இடையே வாரம் இருமுறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் கோரிக்கையை ஏற்று, சிவகங்கை வழியாக மானாமதுரை வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, 2017 மார்ச் 4 முதல் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.
வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகாட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக் கோட்டை, விருதுநகர், திருத் தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், சங்கரன் கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை என மொத்தம் 25 நிறுத்தங்களில் நின்று சென்றது.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 8 இடங்களில் சிலம்பு எக்ஸ்பிரஸ் நின்று சென்றது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் பயனடைந்தனர். ஆனால், கரோனா பரவலின்போது சிலம்பு விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இயக்கப்பட்டபோது, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே தற்போது நின்று செல்கிறது. நரிக்குடி, திருச்சுழி, திருத்தங்கல் நிறுத்தங்களில் நிற்பதில்லை.
இதனால், இரவில் பயணிப் பவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நரிக்குடி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சென்னை செல்வதற்கும், செங்கோட்டை செல்வதற்கும் இரவு நேரத்தில் அருப்புக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது.
அதேபோன்று, மீண்டும் ஊர் திரும்ப அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அதிகாலை வந்து இறங்கி பேருந்து மூலம் ஊருக்குத் திரும்ப வேண்டியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருச்சுழி வட்டாரத் தலைவர் பூமிநாதன் கூறியது: திருச்சுழி, நரிக்குடி மட்டுமின்றி, கமுதியைச் சேர்ந்தவர்களும் திருச்சுழி வந்துதான் ரயிலில் செல்வது வழக்கம். இந்த ரயிலை நம்பியே வணிக நோக்கத்துக்காக பலரும் சென்னைக்கு சென்றனர்.
தற்போது, சிலம்பு எக்ஸ்பிரஸ் திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்லாததால், மதுரை சென்று அங்கிருந்து சென்னைக்கு பேருந்தில் செல்ல வேண்டியிருக்கிறது. கூடுதல் கட்டணம் மட்டுமின்றி, அதிக அலைச்சலாகவும் உள்ளது. எனவே, பொதுமக்களுக்காக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT