Published : 24 Mar 2023 06:12 PM
Last Updated : 24 Mar 2023 06:12 PM
சென்னை: “ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டது பாஜகவின் கோழைத்தனமான செயல்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை விதித்த உடனேயை ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது கண்டத்திற்குரிய செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் தண்டனை அளித்தபின் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைத்து அவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நீடித்து வருகின்றனர்.
இச்சூழலில் ராகுல் காந்தி விவகாரத்தில் மட்டும் தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்காமல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தி நடத்திய தேச ஒற்றுமை நடைப் பயணம் பாஜக அரசிற்கு எதிராக ஏற்படுத்தியுள்ள எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமலும், இனி தேர்தல் அரசியலில் காங்கிரஸ் தலைமை தாங்கும் கூட்டணியை எதிர்கொண்டு வெற்றிப் பெறுவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தும் பாஜக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது.
ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருப்பது பாஜகவின் திராணியற்ற செயல் ஆகும். அதானி விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக, அதுகுறித்து கேள்வி எழுப்பும் ராகுலைக் கண்டு அஞ்சுகிறது என்பதின் வெளிப்பாடாகவும் இந்த கோழைத்தனமான நடவடிக்கை அமைந்துள்ளது. பாஜகவின் இதுபோன்ற அடாவடி செயலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் இந்த உத்தரவை திரும்பப் பெறும் வரை ஜனநாயகத்தை மீட்கும் அறப்போராட்டம் தொடர வேண்டும் என கோருகின்றேன்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT