Published : 24 Mar 2023 05:12 PM
Last Updated : 24 Mar 2023 05:12 PM

“ராகுல் காந்தி மீதான பாஜக தலைமையின் பயத்தையே தகுதி நீக்க நடவடிக்கை காட்டுகிறது” - முதல்வர் ஸ்டாலின்

மு க ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி

சென்னை: “ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. இதன் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை.

ராகுல் காந்தி பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்திக்கு வழங்கி இருக்கிறார். 'வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்' என்றும் சொல்லி இருக்கிறார்.

மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது உச்ச நீதிமன்றம் ஆகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ம் தேதி தீர்ப்பு, 24-ம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு.

ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்குக் காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலை மத்திய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை. மீண்டும் அவரை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்துள்ளார்கள். இந்தத் தகுதி நீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல. இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x