Published : 24 Mar 2023 04:08 PM
Last Updated : 24 Mar 2023 04:08 PM

“மின் வாரியத்தில் கூலித் தொழிலாளர் நியமனத்தை கைவிடுக; 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புக” - திருமாவளவன்

சென்னை: “மின் வாரியத்தில் கூலித் தொழிலாளர் நியமனத்தை கைவிடுக; காலிப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களை நியமித்திட வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஆண்டுக் கணக்கில் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்து தற்போது வரை, வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் போராட்டங்களை மின்வாரிய தொழிற்சங்கங்கள் நடத்திய பிறகும், இதுவரை ஊதிய உயர்வு உள்ளிட்ட முதன்மையான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

மின்வாரியத் தொழிலாளர்களின் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடந்த 22-2-2018-இல் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில், ஒப்பந்தத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. குறிப்பாக, 1-12-2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உயர்ந்து வரும் விலைவாசி, பெருகிவரும் தேவைகளை கருத்திற் கொண்டு ஊதிய உயர்வை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளர்கள் முதல் களப்பணியாளர்கள் வரை சுமார் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமலேயே இருந்து வருகின்றன. அதனால் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படும் நிலை நீடித்து வருகின்றன. காலிப் பணியிடங்களை நிரப்பி வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், ஒப்பந்த முறையில் (out sourcing & Redeployment) கூலித் தொழிலாளர்களை நியமிப்பதை தமிழ்நாடு மின்வாரியம் உடனடியாக முற்றிலும் கைவிட வேண்டும். குறிப்பாக மின் உற்பத்தி நிலையங்களில் நிரந்தர பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளாமல், ஒப்பந்த முறை கூலித் தொழிலாளர்களை மின் உற்பத்தி பணிகளில் நியமிப்பது ஏற்புடையதல்ல. அது தவறான நடைமுறையாகும்.

தமிழ்நாடு மின்வாரியம் காலி பணியிடங்களை நிரப்பும்போது எஸ்சி/எஸ்டிக்கான பின்னடைவு காலி பணியிடங்களையும் நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன், நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மின்வாரியம் முன்வர வேண்டும். மேலும், மின்வாரிய தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் 12.4.2022 நாளிட்ட மின்வாரிய ஆணை எண்: 2-ஐ ரத்து செய்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

புயல், தொடர் மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் மற்றும் கரோனா தொற்று ஊரடங்கு காலங்களில் மின்வாரிய பணியாளர்கள் விடுப்பு இன்றி அயராது பணியாற்றி வந்தார்கள். ஆகவே, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை தமிழ்நாடு மின்வாரியம் விரைந்து வழங்க வேண்டும். மேற்கண்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக மின்வாரிய தொழிற்சங்கங்கள் வரும் மார்ச்- 28 அன்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்பதற்காக கோட்டை நோக்கி அறவழியில் பேரணி நடத்துகின்றனர். அப்பேரணியில் எமது கட்சியின் தொழிற்சங்கமான தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்- தொழிலாளர் விடுதலை முன்னணியும் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x