Published : 24 Mar 2023 04:01 PM
Last Updated : 24 Mar 2023 04:01 PM

தி.மலை அம்மணி அம்மன் மடத்தை இடித்தது நியாயமா? - வம்ச வழியினர் மனக்குமுறல்

அம்மணி அம்மனின் வம்ச வழியினர், மூதாட்டி அம்மணி அம்மன் | படங்கள்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடத்தை இடித்தது நியாயமா என அவரது வம்ச வழியினர் மனக்குமுறலுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே 23,800 சதுரடியில் இருந்த அம்மணி அம்மன் மடத்தில், பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவரான வழக்கறிஞர் சங்கர், வீடு கட்டி குடியிருந்தார். இந்த இடம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தம் என கூறி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாடி வீடு கடந்த 18-ம் தேதி இடித்து அகற்றப்பட்டன. ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை இந்து சமய அறநிலையத் துறை மீட்டது.

இதையடுத்து, பாழடைந்த கட்டிடம் என கூறி, அம்மணி அம்மன் மடத்தை, பொக்லைன் இயந்திரம் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. மடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றப்பட்டது வரவேற்கப்படும் நிலையில், தொன்மையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதற்கு பக்தர்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இடிக்கப்பட்டுள்ள அம்மணி அம்மன் மடத்தை, அவரது வம்ச வழியினர் இன்று (24-ம் தேதி) பார்வையிட்டனர். செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் (அம்மணி அம்மனின் சொந்த கிராமம்) வசிக்கும் நடராஜன் மனைவியான 75 வயது மூதாட்டி அம்மணி அம்மன் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

அவமானங்களை சந்தித்தவர்: பின்னர், மூதாட்டி அம்மணி அம்மன் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரத்தை கட்டி எழுப்பிய அம்மணி அம்மனின் பேரன், பேத்திகள் நாங்கள். அம்மணி அம்மன் இடத்தில் இருந்த வீடு அகற்றப்பட்டது சரியானது. மடத்தில் இடித்தது எந்த விதத்தில் நியாயம்?. அம்மணி அம்மன் பல இடங்களில் பிச்சை (யாசகம்) எடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு கோபுரத்தையும், மடத்தையும் கட்டினார். அப்போது கேலி மற்றும் அவமானங்களை சந்தித்துள்ளார். அவர் கட்டிய மடத்தை, மக்களுக்காக அன்னசத்திரமாக மாற்றி சமூக சேவையாற்றி வந்தார்.

இத்தகைய சிறப்புமிக்க மடத்தை இடித்தது தவறானது. இடித்தவர்கள்தான் மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாள் உற்சவத்துக்கு வரும் பக்தர்கள் தங்க வக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மணி அம்மன் நினைவாக, அவரது பெயரில் உள்ள மடம், தொடர்ந்து செயல்பட வேண்டும். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போன்று, பழைய அன்னசத்திரமாக தொடர வேண்டும். அம்மணி அம்மனின் புகழ் நீடித்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தியான கூடம் அமைக்க கோரிக்கை: இதற்கிடையில், அகமுடையார் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், “அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றியதற்கு வாழ்த்துகள். ஆனால், அம்மணி அம்மன் மடத்தை இந்து சமய அறநிலையத் துறை அகற்றியதை கண்டிக்கிறோம். இந்த துறை தொடங்கப்படுவதற்கு முன்பாக உருவான தொன்மையான மடம். வணிக ரீதியாக பயன்படுத்தாமல், பக்தர்களின் தியான கூடமாக அமைக்க வேண்டும். மேலும் பழமை மாறாமல் மடத்தை புதுப்பிக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகள் மருது சகோதரர்களின் திருவுருவ சிலையை மடத்தில் வைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x