Published : 24 Mar 2023 12:47 PM
Last Updated : 24 Mar 2023 12:47 PM

50,000 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ - தவிர்ப்பு நடவடிக்கைகளை பேரவையில் பட்டியலிட்ட அன்பில் மகேஸ்

பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் நாளில் நடந்த மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பேரவையில் விளக்கம் அளித்தார். அதில், வருங்காலத்தில் இந்த நிலை வராமல் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்தார். அதில், "இந்த 50 ஆயிரம் மாணவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. கரோனா காலம் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவிற்கு பிறகு பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

ஒரு குழந்தை கூட பள்ளியை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை பணியாற்றி வருகிறது. கரோனா காலத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். இவர்கள்தான் தற்போது 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். கரோனா தொற்றால் இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். இதில் 78 ஆயிரம் பேர் தற்போது தேர்வு எழுதி வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வுக்கான பட்டியல் தயார் செய்யும்போது குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப் பதிவு கணக்கில் கொள்ளப்படும். துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

பள்ளி வாரியாக குழு அமைத்து ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுதவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். துணைத் தேர்வுக்கு தயார் செய்ய சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

வரும் கல்வி ஆண்டில் ஒரு வாரத்தில் 3 நாட்கள், 2 வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வராத மாணவர்களின் பட்டியல் தயார் செய்து நடடிக்கை எடுக்கப்படும். 4 வாரத்திற்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், அந்த மாணவர்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்படும். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x