Published : 24 Mar 2023 11:20 AM
Last Updated : 24 Mar 2023 11:20 AM

தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக்க மறுப்பு; மீண்டும் தீர்மானம் நிறைவேற்றவும்: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒர் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று (மார்ச் 24) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்பது நீண்ட நாட்களுக்கு முந்தையது என்பதாலும், அதன்பின் சூழ்நிலை மாறியிருப்பதாலும் தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவுக்கு நேற்று எழுத்து மூலம் விடையளித்த நடுவண் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமின்றி, கர்நாடகம், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றத்திலும் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கருத்துரு பற்றி உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், ஆனால், அந்த கருத்துருவை ஏற்க உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதனால் தான் மாநில மொழிகளை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க இயலவில்லை என்றும் கூறினார். மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடுகள் மாநில மொழிகளுக்கு எதிரானவை ஆகும். சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

அத்தகைய தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு பாமக கொடுத்த அழுத்தம் தான் காரணமாக இருந்தது. ஆனால், அதன் பின் 17 ஆண்டுகள் ஆகியும் தமிழ் அலுவல் மொழியாகவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடுவண் அரசு எவ்வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு தான் தமிழ் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கப்பட தடையாக உள்ளது.

அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடையாக இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348(2) பிரிவின்படி ஓர் உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தி அல்லது அந்த மாநில மொழியை அறிவிக்க முடியும். ஆனால், இந்தப் பிரிவை பயன்படுத்துவதற்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று 21.05.1965ம் நாள் நடுவண் அமைச்சரவைக் குழு எடுத்த முடிவு தான் இதற்கு தடையாக உள்ளது.

இந்த முடிவின்படி உத்தரப்பிரதேசம் (1969), மத்தியப் பிரதேசம் (1971), பிஹார் (1972) மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன்பின் வேறு மொழிகளை அலுவல்மொழியாக்க அனுமதிக்கவில்லை. தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க முடியாது என்ற முடிவு 11.10.2012ம் நாள் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வில் தான் எடுக்கப்பட்டது.

அதன்பின் பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டன. கடந்த பத்தாண்டுகளில் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக மாநில மொழிகளை அறிவிப்பது குறித்த சூழல்களும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மனநிலையும் வெகுவாக மாறியிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மாற்றி வெளியிடும் திட்டத்தை 17.07.2019ல் தொடங்கி வைத்தார்.

அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.இரமணா, 26.11.2021ம் நாள் அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய போது, உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

பின்னர் 30.04.2022-இல் தில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசும் போதும், "இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும்" என்று நீதிபதி ரமணா குறிப்பிட்டார். அதே மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான சந்திர சூட் அவர்களும் இதற்கு ஆதரவாகவே இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று 20.01.2023ம் நாள் அறிவித்த அவர், அதை கடந்த குடியரசு நாள் முதல் நடைமுறைப்படுத்தியும் வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்த போது, இத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதை நம்மில் எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.

இப்போது மாறியிருக்கும் காலச்சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும், மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x