Published : 24 Mar 2023 03:59 AM
Last Updated : 24 Mar 2023 03:59 AM
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டமசோதாவை தாக்கல் செய்து, அதை மறு ஆய்வு செய்யுமாறு கோரினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 41 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே, இதைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், அரசுக்கு உள்ளது.
ஏற்கெனவே பேரவையில் நிறைவற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதாவை 131 நாட்கள்கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஆளுநரின் கேள்விகளும்,அதற்கான பதில்களும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, மீண்டும் மசோதா பரிசீலனைக்கு முன்வைக்கும் கருத்துருவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த மசோதா மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், ஆனால், மனித உயிர்களைப் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில், இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
மாநில மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், பாதுகாக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு.
மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பந்தயம் மற்றும் சூதாட்டம், அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால், இது தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தெளிவாக அறிவித்திருக்கிறார்.
மனச்சாட்சியை உறங்கச் செய்துவிட்டு, எங்களால் ஆட்சி நடத்த முடியாது. எனவே, ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க, அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். தொடர்ந்து, மசோதா மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
தளவாய்சுந்தரம் (அதிமுக): முதல்வராக பழனிசாமி இருந்தபோது கொண்டுவந்த சட்டம், நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டபோது, மீண்டும் ஒரு சட்டம்இயற்றும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, அதிமுக சார்பில் ஆதரிக்கிறோம்.
கு.செல்வப்பெருந்தகை (காங்): உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் சந்தித்தது ஏன்? மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறார்.
ஜி.கே.மணி (பாமக): ஆளுநர் காலம் தாழ்த்தி, மசோதாவை திருப்பி அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது.
நயினார் நாகேந்திரன் (பாஜக): ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், மீண்டும் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டும். நிச்சயம் ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.
ஆளூர் ஷாநவாஸ் (விசிக): ஆளுநர் நியமனங்களில் மாநில அரசுகளின் கருத்தை கேட்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றும் உள்ளது.
நாகைமாலி (சிபிஎம்) : பாஜக அல்லாத மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்குவதற்கான அரசியல் கருவியாக ஆளுநர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியே தமிழக ஆளுநரின் செயல்பாடு.
மாரிமுத்து (சிபிஐ): ஆளுநர் அரசியல் சட்டப்படி செயல்பட வேண்டும். இளைஞர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மசோதாவைக் கொண்டுவந்த முதல்வருக்கு நன்றி.
தொடர்ந்து, சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா(மமக), ஈஆர்.ஈஸ்வரன்(கொமதேக), தி.வேல்முருகன்(தவாக), முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரும் மசோதவை வரவேற்று பேசினர்.
இறுதியாக, முதல்வர் ஸ்டாலின் சட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கோரினார். குரல் வாக்கெடுப்பு மூலம், ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். விரைவில் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT