Published : 14 Sep 2017 09:49 AM
Last Updated : 14 Sep 2017 09:49 AM
‘எ
வ்வழி செல்லும் நம் மொழி?’ - ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘யாதும் தமிழே’ 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளில் ஒன்று. தமிழ் தொடர்பான சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி.
சென்னை பல்கலைக்கழகத்தின் பெண் கல்வித் துறை தலைவர் டாக்டர் பாரதி ஹரிசங்கர், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன், திரைப்பட இயக்குநர் ராம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் குருசங்கர், இணைய தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் துரைபாண்டி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கல்வெட்டு, ஓலைச்சுவடி காலம் தொடங்கி, கணினி காலம் வரை தமிழ் கடந்து வந்த வரலாற்றையும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவுகளையும் பற்றிய விவாதமே நிகழ்ச்சியின் மையப் பொருள்.
தமிழ் உரைநடை
இந்நிகழ்ச்சி குறித்து சா.கந்தசாமி கூறுகையில், “தமிழ் மொழி குறித்து நிறைய விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம். அதில் ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தாய்மொழியாக அல்லாதவர்கள் தமிழுக்காகச் செய்திருக்கும் விஷயங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ராபர் டி நொபிலி என்கிற ஐரோப்பியர்தான் முதன்முதலில் தமிழை உரைநடை வடிவில் எழுதி வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆண்டிரிக்ஸ் ஆண்டிரிக்ஸ் என்கிற போர்ச்சுகீசியர்தான் ‘டாக்ரீனா கிறிஸ்டியானா’ பைபிள் புத்தகத்தை 1578-ல் ‘தம் பிரான் வணக்கம்’ என்கிற பெயரில் முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து அச்சில் வெளியிட்டார். ஆசியாவில் சீன மொழிக்கு அடுத்தபடியாக வெளியான தமிழ் புத்தகம் இதுவே.
தமிழில் புதிய ஏற்பாடு
1800-களில் தரங்கம்பாடியில் ஜீகன் பால்க் என்கிற ஜெர்மானியர் ‘புதிய ஏற்பாட்டை’ தமிழில் வெளியிட்டார். அதே காலகட்டத்தில் அவ்வையாரின் ‘கொன்றைவேந்தன்’ மற்றும் ‘மூதுரை’ நூல்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே ஐரோப்பிய மொழிக்குச் சென்ற முதல் இந்திய நூலாகும்.
இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் தலைசிறந்த மொழி சமஸ்கிருதம் என்கிற கருத்து தோன்றியபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பணியாளரான ஃபிரான்ஸிஸ் வொயிட் எலியட், தமிழில் இருந்தே திராவிட மொழிகள் பிறந்தன என்பதை நிறுவினார். பிற்காலத்தில் ராபர்ட் கால்டுவெல் இந்தக் கருத்தையே ஆதாரங்களுடன் மேம்படுத்தினார். ரஷ்யாவின் நிகிடா குரோவ் என்பவர்தான் ரிக் வேதத்தில் 40 தமிழ் சொற்கள் இருப்பதை உலகுக்கு எடுத்துரைத்தார். திராவிட மொழிகள் 26 எனக் கண்டறிந்து, அதனை 200 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள் என்று சொன்னதும் ஐரோப்பியர்களே.
நவீன கன்னட இலக்கியத்தின் பிதாமகனான மஸ்தி வெங்கடேஸ்வர ஐயங்கார், மலையாள இலக்கியத்தின் மகாகவியான உள்ளூர் பரமேஸ்வர ஐயர் ஆகியோரின் தாய்மொழி தமிழ். தமிழ் எழுத்தாளர்களான ந.பிச்சமூர்த்தி, சுத்தானந்த பாரதி, கி.ராஜநாராயணன் ஆகியோரின் தாய்மொழி தெலுங்கு. ஞானக்கூத்தனின் தாய்மொழி கன்னடம். இவர்களெல்லாம் நம் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம்...” என்கிறார்.
இந்தத் தகவல்கள் மட்டுமல்ல, வரும் செப்டம்பர் 16-ம் தேதி சென்னை, சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் சர்.முத்தா கான்செர்ட் ஹாலில் நடக்கவிருக்கும் விழாவுக்கு வாருங்கள்… தமிழ் மொழியின் அறியப்படாத அரிய விஷயங்களை இன்னும் அறிந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு:
www.yaadhumthamizhe.com
பதிவுக்கு: SMS,THYT
Your Age
அனுமதி இலவசம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT