Published : 30 Sep 2017 08:25 AM
Last Updated : 30 Sep 2017 08:25 AM
பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறைகளின்போது சுங்கச் சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மின்னணு கட்டண முறையை விரிவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 184 சுங்கச்சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில்தான் அதிக அளவில் 45 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஒவ்வொன்றுக்கும் கட்டணங்கள் மாறுபடுகின்றன.
நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்துவரும் நிலையில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்கல்பட்டு, மாதவரம், செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், திண்டிவனம், வாலாஜா உள்ளிட்ட முக்கிய இணைப்பு பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு நிற்கின்றன. இதனால், தாமதம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சிரமமின்றி கட்டணம் வசூலிக்கும் வகையில் சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண முறை கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை போதிய அளவுக்கு விரிவுபடுத்தாததே சிரமத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பயணியர் வாகனங்கள்
கார் ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் 6 அல்லது 7 பாதைகளுடன் பூத்கள் உள்ளன. பண்டிகை நாட்களில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதால், பயணியர் வாகனங்கள் செல்வது கஷ்டமாக இருக்கிறது. எனவே, பண்டிகை அல்லது தொடர் விடுமுறை நாட்களில் பேருந்துகள், கார் என பயணியர் வாகனங்களுக்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பிரத்யேகமாக தலா 2 பூத்கள் ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.
பயண நேரம் அதிகரிப்பு
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. வாகன ஓட்டிகளுக்கு போதிய வசதியும் செய்துதருவதில்லை. இதனால், சுங்கச்சாவடிகளில் வெகுதொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன. பொதுமக்களின் பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கிறது. போதிய ஆட்கள் நியமிக்கப்படாமல் சில சுங்கச்சாவடிகளில் பூத்கள் காலியாக உள்ளன. சில இடங்களில் சில்லறைத் தட்டுப்பாட்டாலும் தாமதம் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில்தான் மின்னணு கட்டண முறையை நெடுஞ்சாலைத் துறை அமல்படுத்தியது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் செல்லும் வழிக்கு ஒன்று, வரும் வழிக்கு ஒன்று என 2 தடங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இதை 4 தடங்களுக்கு விரிவுபடுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும். சுங்கச்சாவடிகளில் நெரிசல் உருவா காது’’ என்றார்.
வங்கிகளுக்கு உத்தரவு
தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சில தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் இதற்கான பிரத்யேக அட்டையை வாகன உரிமையாளர்கள் வாங்கிக்கொண்டு, தேவையான அளவுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதற்கு 10 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.
இந்த அட்டை, வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தால், சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சுங்கச்சாவடிக்கு முன்பு 100 மீட்டர் தொலைவில் வாகனங்கள் செல்லும்போதே, அந்த அட்டை வாயிலாக உரிய கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். அவர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 2 தடத்தில் மட்டுமே தற்போது இந்த வசதி உள்ளது. இதை விரைவில் அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என் றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT