Published : 23 Mar 2023 11:11 PM
Last Updated : 23 Mar 2023 11:11 PM

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவி - நிதியுதவி கோரி மதுரை ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி மாற்றுத்திறனாளி அ.சங்கீதா. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: கஜகஸ்தானில் ஜூலை மாதம் நடைபெறும் ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி மாற்றுத்திறனாளி அ.சங்கீதா, ரூ.2.15 லட்சம் நுழைவுக்கட்டணம் செலுத்த வழியில்லாததால் நிதி உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

மதுரை அரசு முத்துப்பட்டியைச் சேர்ந்த அ.சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், "அரசுப்பள்ளிகளில் ஆரம்பக்கல்வி, மேல்நிலைக்கல்வி படித்து தற்போது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை மாற்றுத்திறனாளி. பெற்றோர் இருவரும் தையல் தொழிலாளிகள். என் குடும்பச்சூழலால் உதவிபெற்று படித்து வருகிறேன்.

எனக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளதால் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டில் மாநில அளவில் 2-ம் இடம், தஞ்சாவூரில் நடந்த ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளேன். ஜூலை மாதம் (ஜூலை 3 முதல் 8ம் தேதி வரை) கஜகஸ்தான் நாட்டில் நடைபெறும் ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவராக இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளேன்.

இதற்கு நுழைவுக்கட்டணமாக ரூ.2.15 லட்சம் செலுத்த வேண்டும். அதனை ஒருவாரத்திற்குள் செலுத்த வேண்டும் என அழைப்பு வந்துள்ளது. எனது குடும்ப சூழ்நிலை காரணமாக ரூ.2.15 லட்சம் செலுத்த இயலாது. எனவே விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு நிதி உதவி செய்தால் இந்தியா சார்பில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். எனவே மாவட்ட ஆட்சியர் நிதி உதவி செய்ய ஆவன செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x