Published : 23 Mar 2023 08:39 PM
Last Updated : 23 Mar 2023 08:39 PM
சென்னை: "எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், "தாம் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என அவரே விளக்கம் அளித்துவிட்ட பின்னரும், ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவரை அவரது பேச்சுக்காகத் தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது என்பதோடு, இதுவரை நாம் பார்த்திராத ஒன்றாகும்.
எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறேன். இறுதியில் நீதியே வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT