Published : 23 Mar 2023 02:50 PM
Last Updated : 23 Mar 2023 02:50 PM
புதுச்சேரி: இலவச அரிசியுடன், சர்க்கரை, கோதுமை, சிறுதானியம் உள்ளிட்ட பொருட்களை தர ரேஷன் கடைகளைத் திறக்க மத்திய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது ரேஷன் கடைகள் தொடர்பாக நடந்த விவாதம் வருமாறு:
கல்யாணசுந்தரம் (பாஜக): ரேஷன் கடைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையின்றி கடும் நெருக்கடியில் உள்ளதை அரசு அறியுமா? அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா? சிறுதானியங்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசுக்கு உத்தேசம் உள்ளதா?
அமைச்சர் சாய்சரவணக்குமார்: புதுவை அரசின் இலவச அரிசி திட்டத்தில் தற்போதுள்ள நேரடி பண பரிமாற்றத்தை மாற்றி அரிசி விநியோகம் செய்ய மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ரேஷன் கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்படும். ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விற்பது குறித்து திறந்தபின் முடிவெடுக்கப்படும். அத்துடன் ரேஷன் கடைகளை திறக்க ஆளுநரிடம் அனுமதி கேட்டு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பிஆர்.சிவா(சுயே): ரேஷன் கடைகளை திறக்கவிடாமல் யார் தடுக்கிறார்கள்? அந்த ஊழியர்களுக்கு 113 மாதமாக சம்பளம் இல்லை. அவர்களால் எப்படி வாழ முடியும்?
எதிர்கட்சித்தலைவர் சிவா: ரேஷன் கடைகளை மூட மத்திய அரசு உத்தரவிடவில்லை. இங்குள்ள அதிகாரிகள்தான் காரணம். மத்திய அரசு அரிசி போடுவதை நிறுத்தச் சொல்லவில்லை. அரசு கவனம் செலுத்தவில்லை. ரேஷன்கடை திறப்பது குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும். பாஜக உறுப்பினர்களே முறையிட்டுள்ளனர். அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு ரேஷன் கடைகளை திறக்காமல் இருக்கக்கூடாது. இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் என்ற பெருமை புதுவைக்கு தேவையா என அரசு யோசிக்க வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் நேரடி பணப்பரிமாற்ற முறையை செய்யுங்கள். புதுச்சேரி என்ன சோதனை எலியா அப்போது ஒட்டுமொத்தமாக திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, பி.ஆர்.சிவா ஆகியோர், ரேஷன்கடைகளை மீண்டும் திறந்து இலவச அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்திபேசினர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
முதல்வர் ரங்கசாமி: மத்திய அரசு நேரடி பண பரிமாற்றம் மூலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கி வருகிறோம். 3 மாதத்திற்கு சேர்த்து பயனாளிகளின் வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை ரேஷன் கடைகளில் வழங்குவதில்லை. ரேஷன் ஊழியர்கள் சம்பளத்திற்காக ரூ.7 கோடி நிதி வழங்க கோப்பு தலைமை செயலருக்கு அனுப்பினோம். தலைமை செயலர் சில கேள்விகளை கேட்டு கோப்பு அனுப்பியுள்ளார். இலவச அரிசியுடன், சர்க்கரை, கோதுமை, சிறுதானியம் உள்ளிட்ட பொருட்களை தர ரேஷன் கடைகளைத் திறக்க மத்திய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT