Published : 23 Mar 2023 01:00 PM
Last Updated : 23 Mar 2023 01:00 PM

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: விபத்துகள் நடைபெறாமல் இருக்க பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டாசு ஆலைகளில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இத்தகைய தொடர் விபத்துகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியதன் விளைவாக இத்தகைய தீ விபத்துகள் நடந்து வருகின்றன. முறையான அனுமதி பெற்றிருந்தாலும் பட்டாசு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்துத் தரப்படுவதில்லை. இதை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவாக இத்தகைய பரிதாப மரணங்கள் நடைபெறுகின்றன.

வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறார். அதேபோல, காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு நிவாரண உதவிகள் செய்கிற அதேநேரத்தில் இத்தகைய வெடி விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு விதிகளையும் உடனடியாக உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x