Published : 23 Mar 2023 11:08 AM
Last Updated : 23 Mar 2023 11:08 AM

பட்டாசு ஆலைகளில் நிகழும் வெடி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்

சென்னை: பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மிகவும் அபாயகரமானது என்பதாலும், உரிய பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்காவிடில் தொழிலாளர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உருவாகும் என்பதாலும், பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகளால் காலமுறை ஆய்வு செய்யப்படுவதும், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான செயல்முறைகள் மற்றும் கையாளும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படுவதும் வழக்கமாகும். இது மட்டுமல்லாமல் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடங்களில் நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தத் துறை சரியாக தனது பணிகளை மேற்கொள்ளாததன் காரணமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அண்மையில், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியிலுள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி நம் நெஞ்சை விட்டு அகலுவதற்குள் மற்றுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டாசுத் தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், நிவாரணம் அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

பட்டாசுத் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததுதான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் கால முறை ஆய்வு மேற்கொள்ளப்படாததற்குக் காரணம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகளோடு ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, இனி வருங்காலங்களில் காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தவும், காலிப் பணியிடங்கள் இருப்பின் அவற்றை நிரப்பவும், பட்டாசுத் தொழிற்சாலைகளில் தகுதி வாய்ந்த வேதியியலர் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x