Published : 23 Mar 2023 06:20 AM
Last Updated : 23 Mar 2023 06:20 AM
சென்னை: உணவுக் குழாய் சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை துறைத் தலைவர் எம்.எஸ்.ரேவதி கூறியதாவது: சென்னையை சேர்ந்த 39 வயது பெண், மூன்று ஆண்டுகளாக உணவு விழுங்குவதில் சிரமப்பட்டுவந்தார். இதையடுத்து அவர்சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதனை செய்ததில், அவருக்கு உணவுக் குழாய் சுருக்கப் பாதிப்பு (அக்ளேசியா கார்டியா) இருந்தது தெரியவந்தது. பொதுவாக உடலில் உணவுக் குழாய், இரைப்பை, குடல், பெருங்குடல் ஆகியவை நான்கு திசு திரைகளால் (லேயர்கள்) இணைக்கப்பட்டுள்ளன.
அதுதான் நமது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டுக்கு இணைப்புப் பாலமாக உள்ளன. திசு திரைகளில் உள்பகுதி, வெளிப்பகுதி மற்றும் நடுப்பகுதி இருக்கும். அதில், நடு திசு திரையில் பாதிப்பு ஏற்பட்டால், அதனுள் சென்று சிகிச்சைஅளிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
மாநிலத்திலேயே முதல்முறை: இந்நிலையில், நடு திசு திரையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து, துல்லியமாக சிகிச்சை அளிக்கும் POEM (PER ORAL ENDOSCOPIC MYOTOMY) என்ற நவீன சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை அந்த சிகிச்சை முறை இல்லை. மாநிலத்திலேயே முதல்முறையாக அந்த சிகிச்சையை, ஸ்டான்லி மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு மேற்கொண்டோம்.
இலவச சிகிச்சை: எனது தலைமையில் ஜீரண மண்டல சிகிச்சை நிபுணர்கள் ரவி, மணிமாறன், சித்ரா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அந்த சிகிச்சையை அளித்தோம். எண்டோஸ்கோபி மூலம் உணவுக் குழாயில் சென்று, ஓர் சிறிய பாதை உருவாக்கப்பட்டு, உணவுக் குழாய் சுருக்கம் சரி செய்யப்பட்டது.
தொடர்ந்து எண்டோஸ்கோபி சென்ற பாதை ஹீமோக்ளிப்ஸ் மூலம் அடைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மருத்துவர் எம்.எஸ்.ரேவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT