Published : 23 Mar 2023 06:30 AM
Last Updated : 23 Mar 2023 06:30 AM
கும்பகோணம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, வேளாண்மை துறையின் கீழ் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என 2010-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டிலுள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில் குறிஞ்சிக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையிலுள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில் முல்லைக்கும், தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டை மருதாநல்லூரிலுள்ள வேளாண்மைத் துறை அரசு விதைப்பண்ணையில் மருதத்துக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரிலுள்ள வேளாண்மைத் துறை அரசு விதைப்பண்ணையில் நெய்தலுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் அச்சடிப்பிரம்பு கிராமத்திலுள்ள புறம்போக்கு நிலத்தில் பாலைக்கும் என பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும் என அந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது.
இதற்காக, 75 ஏக்கரில் ரூ. 8 கோடியில் குறிஞ்சி திணை மரபணு பூங்கா அமைக்கவும், 25 ஏக்கரில் ரூ.8 கோடியில் முல்லை திணைக்கும், 21.47 ஏக்கரில் ரூ.4 கோடியில் மருதம் திணைக்கும், 14.61 ஏக்கரில் ரூ.5 கோடியில் நெய்தல் திணைக்கும், 25.30 ஏக்கரில் ரூ.9 கோடியில் பாலை திணைக்கும் பாரம்பரிய மரபணு பூங்கா அமைக்க 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த, 5 பூங்காக்களில், ஐந்திணை கலாச்சாரம், கட்டிடங்கள், சங்கக்கால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து கலைகள், அந்தந்த திணைகளுக்குரிய மரம், செடி-கொடிகள், பயிர்களை சாகுபடி செய்யவும் விலங்கினங்களை இனப்பெருக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கும்பகோணம் வட்டம் மருதாநல்லூரில் இப்பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தை, அப்போதைய அமைச்சர் மறைந்த கோ.சி.மணி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மரபணு பூங்கா பணிகள் முடுக்கி விடப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்து, திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டு, செயல்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தந்தை அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில், அவரது பிரதான திட்டமான, ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை, அவர் அறிவித்த அதே இடத்தில் அமைக்கவும், போர்க்கால அடிப்படையில் அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT