Published : 22 Mar 2023 08:35 PM
Last Updated : 22 Mar 2023 08:35 PM
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள், நீதிபதி குமரேஷ் பாபு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது ஓபிஎஸ் தரப்பில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு நீடிக்கும் நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் தன்னை கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது. கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு தேர்தலை கொண்டு வந்து அதில் போட்டியிட கடுமையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த செயல்பாடுகள் அனைத்தும் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் நோக்கங்களுக்கு எதிரானவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ அறிவிக்கவில்லை. மேலும், ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது. இந்த பொதுக்குழுக் கூட்டம், எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து எந்த விவாதமும் நடத்தாமல் தங்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக்கூறி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள பொதுக்குழுவிற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. மக்களும், கட்சியினரும் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள் என்று எந்தவித புள்ளி விவரமும் இல்லாமல் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக கட்சியினரிடம் கருத்துக் கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு என கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் வகுத்த விதிகளை மீறும் வகையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காகவே அப்பதவிக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளார். இதற்காகவே தான் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பதவிகளில் இருக்கும் நபர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
எனவே, பொதுச் செயலாளர் பதவிக்கான நிபந்தனைகளை நீக்கினால், அந்தப் பதவிக்கு போட்டியிடத் தயாராக இருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச் செயலாளர் பதவியில் போட்டியிட அனுமதித்தால், இந்த வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருக்கிறேன்" என்று வாதிடப்பட்டது. இதேபோல் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சார்பில், "கட்சியில் உள்ளவர்களை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் ஓபிஎஸ் ஒரு தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். அவரது அணியினர்தான் உண்மையான கட்சியினர் என்றால், முதலில் மக்கள் மன்றத்தில் அவர்கள் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்டனர்.மேலும் அதிமுக தலைமை அலுவலகமான கட்சி அலுவலகத்தை சூறையாடி உள்ளனர். இதனால்தான், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவை எதிர்கொள்வதற்கு வலுவான, தெளிவான ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், எனவே அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறைகூற முடியாது. இதன் அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடப்பதால், அதனை தடுக்க முடியாது.
வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை, நீர்த்துப்போக செய்யும் வகையில், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கும், நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு தடை விதிக்கக்கூடாது. மேலும், 52 ஆண்டு கால அதிமுக வரலாற்றில், 47 ஆண்டுகள் பொதுச் செயலாளர் பதவிதான் இருந்துள்ளது.
5 ஆண்டுகள் மட்டும்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்துள்ளன. எனவே பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பில் எந்தவிதமான தவறும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கான பாதையை தெளிவாக்கியுள்ளது. கட்சிக்கு தொடர்பில்லாத நபர்கள் போட்டியிடுவதை தவிர்ப்பதற்காகவே பொதுச் செயலாளர் பதவிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, இந்த வழக்குகளின் இடைக்கால கோரிக்கைகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT